சுடச்சுட

  

  மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில்  கொத்தடிமைகளாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 16  தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
  சிவகிரி அருகே காகம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் சிமென்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இத்தொழிற்சாலையில் சிமென்ட் கல் தயாரிக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 தொழிலாளர்கள் ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஏஜெண்ட் பாபு என்பவர் மூலம் இத்தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து வேலை செய்துவந்தனர்.
  இந்நிலையில், இத்தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகப் பணிபுரிவதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் பஸ்தர் மாவட்ட ஆட்சியருக்கு கடந்த வாரம் புகார் வந்ததையடுத்து, உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களை மீட்டு அனுப்பி வைக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன், தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாலதண்டாயுதம், வட்டாட்சியர் கெளசல்யா, 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அந்தத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
  விசாரணையில், பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிங்கி (20), ஆர்தி (23), சோமாரி (20), இதேஸர் (18), கணக்டேய் (19), பாமன் (18), பாண்டு (19), உங்கா (18) உள்ளிட்ட 16 தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறியதையடுத்து, அவர்கள் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் மீதமுள்ள 10 தொழிலாளர்கள் இத்தொழிற்சாலையில் தொடர்ந்து வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
  மேலும், புகாருக்கு உள்ளான சிமென்ட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளம், இதர படிகள் முறையாக வழங்கப்பட்டதா என்றும் அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தவறு இருந்தால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்குரிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் ஈரோடு கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார். 
  இதைத் தொடர்ந்து, 16 தொழிலாளர்களும் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai