சீரமைப்புப் பணியின்போது சாலையில் விழுந்த மின்கம்பம்: பெரும் விபத்து தவிர்ப்பு

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் மின் பாதை சீரமைப்புப் பணியின்போது மின் கம்பம் திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் மின் பாதை சீரமைப்புப் பணியின்போது மின் கம்பம் திடீரென சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஈரோடு மாநகரப் பகுதியில், மின் கம்பங்களின் மீது மின் கம்பி செல்லும் திட்டத்துக்கு மாற்றாக பூமிக்கடியில் மின் கேபிள் செல்லும் வகையில் புதைவட மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக தரையில் குழி அமைத்து, குழாய் இணைத்து அதன் உட்புறமாக பிரம்மாண்டமான மின் கேபிளைக் கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது.
தற்போது ஈரோடு வ.உ.சி. பூங்கா, அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதிகளில் இப்பணி நடைபெறுகிறது. மின் கம்பத்தில் இருந்து மின் கம்பியை மாற்றி, புதைவட கம்பியில் இணைக்கும் பணியும், அத்துடன் தேவையற்ற மின் கம்பங்களை அகற்றும் பணியும் சனிக்கிழமை பகலில் நடைபெற்றது. 
இந்தப் பணியின்போது நாச்சியப்பா வீதியில் ஒரு மின் கம்பம் முறையாக அகற்றப்படாத நிலையில் திடீரென சாலையில் விழுந்தது. அதனைச் சுற்றிலும் மின் ஊழியர்கள், பொதுமக்கள் இருந்த நிலையில் யாருக்கும் பாதிப்பு இல்லை.    
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
போதிய முன்னேற்பாட்டுடன் கம்பத்தை அகற்றினோம். இரும்புக் கம்பம் என்பதால் அதிக பாரத்தால் கீழே சாய்ந்தது. இருப்பினும் பக்கவாட்டில் கம்பி, கயிறு கட்டி இருந்ததால் ஆபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. வரும் நாள்களில் கூடுதல் பணியாளர்கள் மூலம் கம்பங்கள் அகற்றும் பணி தொடரும் என்றனர்.
மின் விநியோகம் தடை: புதை கேபிள் பணி காரணமாக காலை 10 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் இரவு 7 மணி வரை மின்விநியோகம் இல்லை. ஈரோடு மாநகரின் பிரதான பகுதியான அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மார்க்கெட் பகுதிகளில் கடந்த 20 நாள்களாக வாரத்தில் 3 நாள்கள் பகல் முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். 
இந்தப் பணி எப்போது நிறைவடையும், எந்தெந்த நாள்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை மின் வாரியம் ஒவ்வொரு வாரமும் முன்கூட்டியே அறிவித்தால் அதற்கேற்ப தங்களுக்கான பணிகளைத் திட்டமிட முடியும் என ஈரோடு நகரில் உள்ள வணிகர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், மின் நிறுத்தத்தை பகல் 2 மணிக்கு மேல் நீட்டிக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com