பெருந்துறையில் குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

காவிரி ஆறு நிறைந்து தண்ணீர் செல்லும் நிலையில் கடந்த 25 நாள்களாக குடிநீர் கிடைக்காமல் பெருந்துறை பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

காவிரி ஆறு நிறைந்து தண்ணீர் செல்லும் நிலையில் கடந்த 25 நாள்களாக குடிநீர் கிடைக்காமல் பெருந்துறை பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
பெருந்துறை பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தொழில் ரீதியாக தினமும் 10,000 க்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்ட நிலைமாறி தற்போது 20 நாள்களுக்கு ஒரு முறையும், சில சமயங்களில் அதையும் கடந்து குடிநீர் விநியோகிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டபோது, குடிநீர் வடிகால் வாரியத்திடம் பணம் கொடுத்து தண்ணீர் பெற்று விநியோகிக்கிறோம். அவர்களின் மெத்தனத்தால் பேரூராட்சிக்கு வர வேண்டிய 23 லட்சம் லிட்டர் தண்ணீர் கடந்த சில நாள்களாக  7முதல் 8 லட்சம் லிட்டர் மட்டுமே வருகிறது. 10 லட்சம் லிட்டருக்கு மேல் வாரியம் வழங்குவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் மின்சாரம் சரிவர இல்லை. காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கும் ஆழ்துளைக் கிணற்றில் ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது என காரணம் கூறுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து, சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்காடச்சலம் கூறியது:
மின்சாரம் சரிவர இல்லை என்று கூற முடியாது. நான் அமைச்சராக இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறி இரண்டு பீடர் மின்சார விநியோகம் பெற்றுத் தந்துள்ளேன். ஒரு பீடரில் மின்சாரம் தடை ஏற்பட்டால் மற்றொரு பீடர் மின்சாரம் விநியோகம் செய்யும். எனகே, 24 மணி நேரமும் தடையில்லாத மும்முனை (3பேஸ்) மின்சாரம் பெற்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு நீர் ஊந்து நிலையத்திலும் இரண்டு மின் மோட்டார் வைக்கப்பட்டுள்ளது.   ஒன்று பழுது ஏற்பாட்டால் மற்றொன்று இயங்கும். ஆகவே, மின்சாரம் சரிவர இல்லை என்பதும், மின் மோட்டார் பழுது என்றும் காரணம் காட்டி குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படவும் வாய்ப்பு இல்லை.  
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்து, தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். அவரும் அதிகாரிகளையும், பணியாளர்களையும் அனுப்பியுள்ளோம். நேரில் சென்று பார்வையிடப்போவதாகத் தெரிவித்துள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com