சென்னிமலை அருகே மழை வேண்டி கோயில்களில் பூஜை
By DIN | Published On : 19th September 2019 08:29 AM | Last Updated : 19th September 2019 08:29 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே மழை வேண்டி கோயில்களில் சுவாமிக்கு அரிசி, சர்க்கரை வைத்து பொதுமக்கள், விவசாயிகள் பூஜை செய்தனர்.
சென்னிமலையை அடுத்த புதுவலசு, தட்டாரவலசு பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இதற்காக, ஒவ்வோர் ஆண்டும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் புதுவலசு, தட்டாரவலசு, நல்லபாளியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி விரதம் இருந்து மழைக்காக அரிசி பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி, பொதுமக்கள் புதன்கிழமை ஒன்றுகூடி விரதம் இருந்து காலை 8 மணிக்கு புதுவலசு பிள்ளையார் கோயிலில் அரிசி வைத்து பூஜை செய்தனர். பின்னர், அங்கிருந்து தாரை - தப்பட்டைகள் முழங்க அரிசி, நாட்டுச் சர்க்கரையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று தட்டாரவலசு, வண்ணாம்பாறை ஆகிய இடங்களில் உள்ள பிள்ளையார் கோயில், நல்லபாளி சிவந்தீஸ்வரர் கோயில், ஆண்டாத்தாள் கோயில், நடுமலை ஆண்டவர் ஆகிய கோயில்களில் வழிபாடு செய்தனர். பகல் 12 மணியளவில் சென்னிமலையின் அடர்ந்த தெற்கு வனப் பகுதியில் உள்ள வருணபகவான் கோயிலுக்குச் சென்று அங்கும் வழிபாடு செய்தனர். இறுதியாக, மலங்காட்டு கருப்பணசாமி கோயிலுக்குச் சென்று அங்கு கருப்பணசாமி, கன்னிமார், தன்னாசியப்பனுக்கு பூஜை செய்தனர்.