சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 22nd September 2019 05:11 AM | Last Updated : 22nd September 2019 05:11 AM | அ+அ அ- |

சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அவசரக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தலைவர் ராக்கியப்பன் பிரச்னைகள் குறித்துப் பேசினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அவர் கூறியது: நூல் விலை தினமும் ஏற்ற, இறக்கமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டும் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால், எந்த மாற்றமும் இல்லாததால் துணிக்கான ஆர்டர் எடுக்கும்போது ஒரு விலையும், துணியை நெய்து முடித்த பின் விலை மாற்றமும் ஏற்படுகிறது. இதனால், மீட்டருக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், பல விசைத்தறியாளர்கள் தொழிலை நடத்த முடியாமல் மூடியுள்ளனர்.
நூல் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கவும், விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை முதல் (செப்டம்பர் 22) காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனால், அப்பகுதியில் உள்ள 2,500 விசைத்தறிகள் மூடப்படுகிறது. இதே நிலையில்தான் ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இவர்களும் ஓரிரு நாளில் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் சூழல் உள்ளது.