தூய்மைக் காவலர்களுக்கு மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கக் கோரிக்கை

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு  4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு  4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இத்தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 10 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஈரோடு மாவட்ட தூய்மைக் காவலர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.பி.கனகவேல் ஆட்சியர் சி.கதிரவனிடம் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் 1,960 தூய்மைக் காவலர்கள் உள்ளனர். அனைத்து குடியிருப்புகளிலும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உடலுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் சூழலில் பணிபுரிந்து வருகிறோம். 
அனைத்து உள்ளாட்சிகளிலும் பணிச்சூழல் ஒன்றுதான். ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு அதிகமாகவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சமாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.  
நகராட்சிகளில் நாளொன்றுக்கு ரூ. 390, கிராம ஊராட்சிகளில் ரூ. 86 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டைக் களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 3 அல்லது 4 மாதங்கள் ஆனாலும் கூலி கிடைப்பதில்லை. மேலும், குப்பைகளைத் தரம்பிரிக்க வாங்கப்பட்ட தொட்டிகளும் உடைந்துவிட்டன. குப்பைகளை கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டிகளும் சேதமடைந்துவிட்டன. 
இவற்றைச் சீரமைத்துக் கொடுக்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யவும் வேண்டும். மேலும், அனைத்து தூய்மைக் காவலர்களுக்கும் பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். மாதம்தோறும் 10 ஆம் தேதிக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சலவைத் துறை அமைத்துக் கொடுக்க கோரிக்கை: 
ஈரோடு மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.எஸ்.பால்ராஜ், நிர்வாகிகள் அளித்த மனு:
ஈரோடு மாவட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சலவையாளர்களுக்கு அரசு உதவிகள் அதிகம் கிடைப்பதில்லை. 500 க்கும் மேற்பட்ட சலைவைத் தொழிலாளர்கள் உள்ள பெருந்துறை, அந்தியூர் போன்ற பகுதிகளில் சலவைத் துறை கிடையாது. மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக சலவைத் துறை அமைத்துக் கொடுக்க வேண்டும். 
அதேபோல, மாவட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராமப் பகுதிகளில் பல சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பல குடும்பங்களுக்கு சலவைப் பெட்டி இல்லை. தற்போது சலவை பெட்டிகளின் விலை மிகவும் அதிகமாகி விட்டதால், விலைக்கு சலவைப் பெட்டி வாங்கித் தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். சலவைப் பெட்டிகளை அரசு சார்பில் வழங்க வேண்டும். சலவைத் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும். 
வீட்டுமனையை மீட்டுத்தர கோரிக்கை: 
சத்தியமங்கலம் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:
குமரன் பகுதியில் அரசு சார்பில் 69 வீட்டுமனைப் பட்டாக்கள் அண்மையில் வழங்கப்பட்டன. தற்போது அப்பகுதியில் வீடு கட்ட பொதுமக்கள் முடிவுசெய்து பணிகளை துவக்கியுள்ளனர். இந்நிலையில், வீடு கட்ட விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர்.  மேலும், அங்கு வசிப்பவர்கள் மற்றவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும். 
போலி கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: 
அங்கீகாரம் இல்லாமல் மாணவிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். 
அந்த மனு விவரம்:
கர்நாடக மாநிலம், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இன்டர்நேஷனல் மாண்டிசோரி டீச்சர் டிரைனிங் இன்ஸ்டிட்யூட் செயல்பட்டு வருகின்றது. இக்கல்வி நிறுவனத்தின் முகமை ஈரோட்டில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் சேர ஒரு மாணவிக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. கட்டணம் செலுத்திய மாணவிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில், இக்கல்வி நிறுவனத்தின் ஈரோடு முகமை செயல்படுவதற்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் இருந்து வந்ததால் மாணவிகளால் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டணமாக செலுத்திய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் போலியாக செயல்பட்டு வந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்நிலையில், பணம் செலுத்தி ஏமாற்றமடைந்த 10 மாணவிகள் மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் இதுதொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் 2015 ஆம் ஆண்டு முதல் எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் ஏராளமானோரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு திட்டமிட்டு ஏமாற்றி வந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். 
மனைக்கான கிரயப் பத்திரத்தை வழங்கக் கோரிக்கை: 
ஈரோடு, ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் இரணியன் வீதியைச் சேர்ந்த மல்லிகா (55), அவரது மகன் அருள்ராஜ் அளித்த மனு:
1988 இல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் நாங்கள் வசிக்கும் 14 ஆம் மனை எண் நிலத்தை வாங்கினோம். அந்த இடத்துக்கான தொகை ரூ. 63,220, வங்கிக் கடன் ரூ. 23,200, சார் பதிவாளர் பதிவுக் கட்டணம் ரூ. 1,800  என முழு தொகையும் செலுத்திவிட்டோம்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் இந்த மனையைப் பெற்றதால் அவர்களின் விதிப்படி 20 ஆண்டுகளில் மனையைக் கிரையம் செய்து கிரையப் பத்திரத்தை வழங்க வேண்டும். இதற்காக 2014 ஆம் ஆண்டு முதல் கோவை குடிசை மாற்று வாரிய மண்டல அலுவலகம், திருப்பூர் பொறியாளர் அலுவலகம், ஈரோடு குடிசை மாற்று வாரிய அலுவலகங்களுக்கு அலைந்து வருகிறோம். பத்திரத்தை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.
எங்களைப்போல 7 பேர் முழுத் தொகையையும் செலுத்திவிட்டனர். பெரும்பாலானோர் குறிப்பிட்ட தொகை செலுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கும் பத்திரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். பத்திரம் கிடைக்காததால் அந்நிலத்தில் வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், கடன் பெறுதல் போன்ற எந்தப் பணியும் செய்ய முடியவில்லை. எங்களுக்கு கிரையப் பத்திரத்தை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com