வாய்க்கால் புறம்போக்கில் குடியிருப்போரை அப்புறப்படுத்த நடவடிக்கை

ஈரோடு வருவாய் கோட்டத்தில் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் நடவடிக்கை

ஈரோடு வருவாய் கோட்டத்தில் வாய்க்கால் புறம்போக்கில் குடியிருப்போரை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது என கோட்டாட்சியர் பி.முருகேசன் தெரிவித்தார். 
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பி.முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்: 
காளிங்கராயன் பாசன சபைத் தலைவர் வி.எம்.வேலாயுதம்: காளிங்ராயன் வாய்க்காலில் கரையில் பல இடங்களில் நடைபாதை சரியில்லாமல் உள்ளதால் அவற்றை சரி செய்ய வேண்டும். கொடிவேரியில் இருந்து பவானி வரையில் பவானி ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம். தடுப்பணை கட்ட ஆய்வு நடப்பதாக முதல்வர் அண்மையில் தெரிவித்துள்ளார்.  தடுப்பணை அமைக்கப்பட்டு இருந்தால் தற்போது பெய்யும் மழை நீரை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால், தற்போது பெய்யும் மழை நீர் வீணாகி வருகிறது. பாசனப் பகுதியில் கொப்பு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
கோட்டாட்சியர்: வாய்க்கால் புறம்போக்கில் குடியிருப்போரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அகற்றப்படும் நபர்களுக்கு குடியிருப்பு வசதிக்காக கொடிமுடி பகுதியில் 200 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை பெய்து வருவதால் பாசனப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்வதற்கான வழிவகை செய்து வருகிறோம்.
சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு: ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலையின் காரணமாக விவசாயப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும். குரங்கன் ஓடையில் இரண்டு இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. விரைவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தால் அரசு அதிகாரிகள் அதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால், அரசு அறிவித்த விவசாய நலத்திட்டங்கள் நின்றுவிடும். இதனால், உள்ளாட்சித் தேர்தலை 2021ஆம் சட்டப் பேரவைத் தேர்தல் வரும்போது அதோடு சேர்த்தோ அல்லது அதன் பிறகோ நடத்த வேண்டும். நெல் கொள்முதல் விலையை கிலோ ரூ. 25 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஈரோடு நகருக்குள் சாலைகளை சீரமைக்க வேண்டும். 
கோட்டாட்சியர்: குரங்கன்பள்ளத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணி முடிந்துள்ளது. ரூ. 50 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. 
பெரும்பள்ளம் பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஈஸ்வரமூர்த்தி: மொடக்குறிச்சி வட்டம், நன்செய் ஊத்துக்குளி கிராமத்தில் பெரும்பள்ளம் பாசனத்தை நம்பி 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இங்குள்ள இடத்தை பல தலைமுறைகளாக களமாகப் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், களம் புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடத்தை கையகப்படுத்தி, இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளனர். பல தலைமுறைகளாக நாங்கள் களமாகப் பயன்படுத்தி வந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்தோம். இந்தப் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டோம். விவசாயிகள் பயன்படுத்தி வந்த களம் புறம்போக்கு இடத்தில் குடிசை மாற்றுவாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது தொடர்பாக உரிய விசாரணை செய்து 8 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
இதுதொடர்பாக நாங்கள் ஆட்சியரை சந்தித்து முறையிட்டோம். இதைத்தொடர்ந்து உடனடியாகப் பணிகளை நிறுத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாங்கள் விவசாய விளை பொருள்களை உலர வைப்பதற்காகப் பயன்படுத்தி வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்கக் கூடாது. மேலும், தொடர்ந்து இந்த களத்தை பெரும்பள்ளம் பாசன விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com