ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 
ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் நடைபெற்ற பேருந்துகள் இயக்க துவக்க நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வே.பொ.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா என்ற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
பள்ளிக் கல்வித் துறை  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பல்வேறு வழித்தடங்களுக்கான 22 புதிய பேருந்துகளின் இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.  அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 2017-2018 கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.
8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்க ரூ. 409 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் இல்லை. மாணவர்களுக்கு விலையில்லா ஷூ வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படும். சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். 
370 பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் சென்னையில் செப்டம்பர் 26 ஆம் தேதி துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து,  ஈரோட்டில் 22 பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மண்டலத்துக்கு 2018-19 ஆம் ஆண்டில் 112 புதிய பேருந்துகளும், 2019-20 ஆம் ஆண்டில் 30 புதிய பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 4 பேருந்துகளின் கட்டமைப்புகள் முடிவுற்றவுடன் விரைவில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், ஈரோடு ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com