மஹாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மூதாதையர் வழிபாட்டுக்கு குவிந்த பக்தர்கள்

பவானி கூடுதுறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி, மூதாதையர் வழிபாட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 


பவானி கூடுதுறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி, மூதாதையர் வழிபாட்டுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 
அமாவாசையையொட்டி, காவிரி, பவானி, கண்ணுக்குப் புலப்படாத அமுதநதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் பரிகார வழிபாட்டுக்காக சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பரிகார மண்டபங்கள், தற்காலிகப் பரிகார கூடங்களும் நிரம்பின. மூதாதையருக்கு தர்ப்பணம் செய்தும், பிண்டம் வைத்தும் வழிபாடு நடத்திய பக்தர்கள் காவிரியில் கரைத்து சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
மேலும், திருமண தடை, நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்தி பரிகார வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
இவ்வழிபாட்டில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கார்கள், இருசக்கர வாகனங்களில் வந்ததால் கூடுதுறை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கையால் பவானி - மேட்டூர் சாலையில் பிற்பகல் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவிரி ஆற்றில் பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாத வகையில் போலீஸார், தீயணைப்புத் துறையினர், மீனவர்கள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸார் ரகசிய கேமராக்கள் கொண்டும், சாதாரண உடைகளிலும் தொடர்ந்து கண்காணித்தனர். 
மஹாளய அமாவாசை வழிபாட்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூடுதுறை பகுதியே மக்கள் வெள்ளத்தால் நிரம்பிக் காணப்பட்டது. சங்கமேஸ்வரர் கோயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com