ஒருங்கிணைந்த மஞ்சள் ஏலத்தால் பாதிப்பு: விவசாயிகள் கருத்து

ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்தும் பட்சத்தில் பெரிய வியாபாரிகளின் கைகளில் விலை நிர்ணயம்

ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்தும் பட்சத்தில் பெரிய வியாபாரிகளின் கைகளில் விலை நிர்ணயம் சென்றுவிடுவதால் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காது என்கின்றனர் மஞ்சள் வியாபாரிகள். 
 ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்,  ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. தவிர உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனம் உள்பட பல இடங்களில் மஞ்சள் ஏலம் நடக்கிறது. தினமும் 2,000 குவிண்டாலுக்கு மேல் விற்பனை நடக்கிறது. 
 இதில், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் காலை 10 மணி, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 11 மணி, ஈரோடு கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 11.30 மணி, கோபி கூட்டுறவு சங்கத்தில் 12 மணி என குறித்த நேரத்தில் ஏலம் நடக்கிறது.  சிறிய பெட்டிகளில் வரிசையாக மஞ்சள் மாதிரிகளை விவசாயிகள் வைப்பார்கள். விவசாயி தெரிவிக்கும் விலை, எஸ்.எம்.எஸ் மூலம் வியாபாரிகளுக்கு அனுப்பி அவர்கள் மாதிரி எண்ணுடன் விலை கோருவார்கள். அந்த விலை விவசாயிக்கு உடன்பாடு என்றால் அந்த மஞ்சள் விற்பனை செய்யப்படும்.
 மொத்தம் 20 கி.மீ-க்குள் நான்கு இடங்கள் உள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் செல்வதில் சிரமம் ஏற்படுவதால் ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம் அமைத்து ஏலம் நடத்த கோரி வருகின்றனர்.
 இதற்கான இடவசதி, கிடங்கு வசதி, பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் நீங்கலாக மற்ற வியாபாரிகளின் நம்பகத்தன்மை, மாதிரியில் வைத்த மஞ்சளும், ஒப்படைக்கும் மஞ்சளும் ஒன்றா என்பது உள்பட பல பிரச்னைகள் உள்ளதால், இதில் அரசும், வியாபாரிகளும் தயங்குகின்றனர்.
 இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சத்தியமூர்த்தி கூறியதாவது: 
ஒரே இடத்தில் ஏலம் நடக்கும்போது, பெரிய நிறுவனங்கள், பணம் படைத்தவர்கள், பெரிய வியாபாரிகள் மொத்தமாக விலை பேசும்போது, சிறிய வியாபாரிகளால் தாக்குபிடிக்க முடியாது. விலை கோர முடியாது. குறிப்பிட்ட நாளில், சிறிய வியாபாரிகள் குறைந்து போட்டி இல்லாமல் போகும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காது என்றார்.
 இதுகுறித்து கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எங்கு ஏலம் நடந்தாலும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு ஒரு சதவீதம் செஸ் வசூலிக்கப்படுகிறது.  கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடக்கும் ஏலத்தில் 1.5 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை மூலம் சங்க உறுப்பினர்களான விவசாயிகள், ஊழியர்களுக்கான நல உதவி, போனஸ் போன்றவை வழங்கப்படுகின்றன. ஒரே இடத்தில் நடக்கும் ஏலத்தால் இதுபோன்ற நல உதவி, செயல்பாடுகள் பாதிக்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com