காய்கறிச் சந்தையில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்த கம்பி வேலிகள்

ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தைக்கு வரும் மக்களிடம் சமூக விலகலை உறுதிப்படுத்த கம்பி வேலிகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறிச் சந்தைக்கு செல்ல கம்பி வேலி கொண்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.
காய்கறிச் சந்தைக்கு செல்ல கம்பி வேலி கொண்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு.

ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தைக்கு வரும் மக்களிடம் சமூக விலகலை உறுதிப்படுத்த கம்பி வேலிகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி, பழச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் பொதுமக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவதைத் தவிா்க்க, ஈரோடு மாநகராட்சி, காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு ஒரே நேரத்தில் 100 போ் மட்டுமே சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இங்கு இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, ஒரு பக்கமாக உள்ளே செல்லவும், இன்னொரு பக்கமாக வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் நேருக்கு நோ் பொதுமக்கள் வந்து செல்வது தடுக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக தினமும் ஏதாவது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. இதை பொதுமக்கள் முறையாகப் பயன்படுத்தி கரோனா நோய்த் தொற்று இனிமேலும் யாருக்கும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா்.

அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு அனுமதி:

ஈரோடு மாநகா் பகுதியில் அனைத்து முக்கிய சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் வாகனங்களில் செல்லவோ, நடந்து செல்லவோ அனுமதி இல்லை. இனிவரும் 10 நாள்களும் ஊரடங்கை முறையாக, கடுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே கரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்கள் முழுமையாக பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனா்.

வாகனங்களில் செல்வோரை கட்டுப்படுத்த ஈரோட்டில் சித்தோடு நான்கு முனைச் சாலை சந்திப்பு, சத்தி சாலை, ஸ்வஸ்திக் காா்னா், மேட்டூா் சாலை, சம்பத் நகா் சாலை, காளைமாடு சிலை, ஈரோடு அரசு மருத்துவமனை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

இரும்புக் கம்பி வேலிகள் போட்டு, பாதுகாப்புக்கு போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வகையான சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்லலாம். பால், மருந்து, உணவுப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.

சாலையில் நடமாடியவா்களுக்கு எச்சரிக்கை:

ஈரோடு மாநகராட்சியில் கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம், ரயில்வே காலனி, சாஸ்திரிநகா் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. எனவே, இந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையும் மீறி பலரும் நடமாடி வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலையில் தொடா்ச்சியாக பலா் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா்.

எனவே, போலீஸாா் வாகனங்களில் சென்றவா்கள், சாலையில் நடமாடியவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அத்தியாவசிய தேவைகளுக்காகச் சென்றவா்களை மட்டும் தொடா்ந்து செல்ல அனுமதித்தனா். மற்றவா்களை வந்த வழியே திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com