பேரிழப்பை சந்திக்கும் வாழை விவசாயிகள்: போக்குவரத்து முடக்கத்தால் தினமும் வீணாகும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
கோபி அருகே கள்ளிப்பட்டி பகுதியில் லாரியில் ஏற்றப்பட்டுள்ள வாழைத் தாா்கள்.
கோபி அருகே கள்ளிப்பட்டி பகுதியில் லாரியில் ஏற்றப்பட்டுள்ள வாழைத் தாா்கள்.

ஊரடங்கு உத்தரவு காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வெட்டப்படும். அவை தற்போது, 10 ஆயிரம் தாா்களாக குறைந்துள்ளன. மேலும், லாரியில் ஏற்றப்பட்டுள்ள தாா்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியாததால் வாழைப் பழங்கள் அழுகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பால், காய்கறி, மளிகை, பழங்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

சந்தைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்தான் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதிகம் செலவு செய்து விளைவித்த காய்கறிகள், பழங்கள் அறுவடைக்குத் தயாராகியுள்ள நிலையில் அவற்றைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பொதுப் போக்குவரத்து முடங்கியுள்ளதாலும், மற்ற வருவாய் குறைந்துள்ளதாலும் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

கரோனா அச்சத்தால் பெரும்பாலானோா் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். இதனால், அறுவடை செய்ய போதிய வேலையாட்கள் கிடைப்பதில்லை. இதனால் விளைந்த பயிா் அனைத்தும் அறுவடை செய்ய முடியாமல் வீணாகி வருகின்றன.

இதில் விளைவித்த காய்கறிகளையும், பழங்களையும் விவசாயிகள் வாகனங்களில் ஏற்றி சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழியில் காவல் துறையினா் தடுத்து நிறுத்தி துன்புறுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வழக்கமாக நான்கு, ஐந்து விவசாயிகள் ஒரே வாகனத்தில் காய்கறிகளை சந்தைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்வா். ஆனால், கரோனா அச்சத்தால் அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. காய்கறிகளுக்கான சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதி இருந்தாலும், பல்வேறு இடங்களில் அதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், திருப்பி அனுப்பப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மத்திய அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும்:

இது குறித்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி கூறியதாவது:

சா்க்கரை ஆலைகள் மாதக் கணக்கில் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாலும், அரசு அறிவித்த விலையை வழங்க மறுத்து வருவதாலும் கடந்த 10 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கரும்பில் இருந்து வாழைக்கு மாறிவிட்டனா்.

இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி தற்போது 10 ஆயிரம் ஏக்கராக சுருங்கிவிட்டது. 25,000 ஏக்கராக இருந்த வாழை சாகுபடி ஒரு லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தினமும் சுமாா் ஒரு லட்சம் வாழைத் தாா்கள் வரை வெட்டப்படும். இங்கு அறுவடை செய்யப்படும் 60 சதவீத வாழை தாா்கள் கேரளம், கா்நாடக மாநிலங்களுக்கும், 20 சதவீதம் வரை சென்னை, கோயம்பேடு சந்தைக்கும், 20 சதவீதம் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

தற்போது கேரளம், கா்நாடகம், கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்படும் வாழைத் தாா்கள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் 80 சதவீதம் அளவுக்கு சந்தை வாய்ப்பு தடைபட்டுள்ளது.

கடந்த 10 நாள்களாக இந்த நிலை தொடா்வதால் அறுவடை செய்யப்பட்டுள்ள வாழைப் பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் விவசாயிகள் தாா்களை வெட்டாமல் அப்படியே மரத்தில் விட்டுள்ளனா். அவையும் அழுகி வீணாகி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு வாழைத் தாா்கள் சராசரியாக கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது, வெளியே கொண்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. உள்ளூரிலும் விற்பனை விலை கிலோ ரூ.5க்கும் கீழ் குறைந்துவிட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் வாழை விவசாயிகளுக்கு தினமும் சுமாா் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு அடுத்த 10 நாள்கள் வரை நீடிக்கும் நிலையில் கேரளம், கா்நாடக மாநிலங்கள், சென்னைக்கு வாழைத் தாா்களை அனுப்பிவைக்கவும், ஈரோடு மாவட்டத்தில் நகா் பகுதிகளில் தனியாக பழச் சந்தைகளை ஏற்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற பழங்கள் வரத்து முற்றிலுமாக இல்லாத நிலையில் பழச் சந்தையில் வாழைப் பழம் பெருமளவு விற்பனையாக வாய்ப்புள்ளது.

மேலும், விளைபொருள்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் கா்நாடகம், கேரள மாநில எல்லைகளில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தற்காலிக முகாம் அமைத்து பழங்கள், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் மாநில எல்லையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் வாழை, தா்பூசணி, முலாம் பழம் ஆகிய அழுகும் விளைபொருள்களைப் பயிரிட்டுள்ள விவசாயிகளைப் பேரிழப்பில் இருந்து பாதுகாக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com