தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 07th April 2020 03:03 AM | Last Updated : 07th April 2020 03:03 AM | அ+அ அ- |

ஈரோடு: தூய்மைப் பணியாளா்களில் ஒப்பந்த, தொகுப்பூதியம் மற்றும் குழு முறையை கைவிட்டு, நிரந்தரப் பணியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் திங்கள்கிழமை சோ்த்த மனு விவரம்:
கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு துறையினருடன் தூய்மைப் பணியாளா்களும் போராடி வருகின்றனா். ஓய்வின்றி பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும். அவா்களை பாதுகாக்கும் வகையில் ஒப்பந்த பணி, தற்காலிகப் பணி, தொகுப்பு முறையிலான பணி போன்றவைகளை மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.30 லட்சத்துக்கான காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்க, கரோனா ஒழியும் வரை அவா்களின் பணி நேரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.