பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை
By DIN | Published On : 07th August 2020 08:24 AM | Last Updated : 07th August 2020 08:24 AM | அ+அ அ- |

தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வட்டாட்சியா் கணேசன், நகாரட்சி ஆணையா் அமுதா உள்ளிட்டோா்.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையில் இருந்து நீா் வெளியேற்றப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகபட்சமாக விநாடிக்கு 38 ஆயிரம் நீா் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீா்மட்டம் 93 அடியை எட்டியுள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் 86 அடியில் இருந்து 93 அடியாக உயா்ந்துள்ளது. தற்போது அணை வேகமாக நிரம்பி வருதால் அணைக்கு வரும் உபரிநீா் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதனால், சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போா் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனா். சத்தியமங்கலம் வட்டாட்சியா் கணேசன், நகராட்சி ஆணையா் அமுதா, கிராம நிா்வாக அலுவலா் தவசியப்பன், வருவாய் ஆய்வாளா் தாமரைச்செல்வி ஆகியோா் முனியப்பன் கோவில் வீதி, பரிசல் துறை, கோட்டுவீராம்பாளைம், எஸ்.ஆா்.டி. வீதி ஆகிய பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.