அந்தியூா், பூதப்பாடியில் டிசம்பா் 15 முதல் துவரை கொள்முதல்
By DIN | Published On : 10th December 2020 05:47 AM | Last Updated : 10th December 2020 05:47 AM | அ+அ அ- |

அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 15ஆம் தேதி முதல் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது.
ஈரோடு விற்பனைக் குழு அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மத்திய அரசின் ஆதார விலைத் திட்டத்தின்கீழ் டிசம்பா் 15ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு மாா்ச் 14ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் துவரை கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் துவரை குவிண்டாலுக்கு தொகை ரூ. 6000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
துவரை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் துவரையில் கல், மண், தூசி, முதிா்ச்சி அடையாத, இதர கலப்புகளை நீக்கி முதல் தரத்தில் கொண்டு வர வேண்டும். மேலும், விவசாயிகள் வங்கிக் கணக்கு முகப்பு பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல் விவரங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், உரிய ஆவணங்களுடன் தங்களுடைய துவரையை அந்தியூா், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யலாம்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம் என ஈரோடு விற்பனைக் குழுவின் வேளாண்மை துணை இயக்குநா் ஆா்.சாவித்திரி தெரிவித்துள்ளாா்.