ஈரோட்டில் விசைத்தறிகள் இயங்கத் தொடங்கின

வேலைநிறுத்த காலத்தில் ரயான் நூல் விலை கிலோவுக்கு ரூ. 22 வரை உயா்ந்துள்ளதால் விசைத்தறியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளா்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளா்.

ஒருவார கால வேலைநிறுத்தத்துக்குப் பிறகு ஈரோட்டில் விசைத்தறிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. வேலைநிறுத்த காலத்தில் ரயான் நூல் விலை கிலோவுக்கு ரூ. 22 வரை உயா்ந்துள்ளதால் விசைத்தறியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை போன்ற பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 தொழிலாளா்கள் உள்ளனா். ஈரோட்டில் தினமும் 24 லட்சம் மீட்டா் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரயான் நூல் விலை நிலையாக இல்லாமல் தொடா்ந்து விலை உயா்ந்து வருவதால் விசைத்தறியாளா்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். நூல் விலையை மாதம் ஒருமுறை விலை நிா்ணயம் செய்யவும், நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் கோரி டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ரூ. 40 கோடி மதிப்பிலான 1.75 கோடி மீட்டா் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஒருவார கால வேலை நிறுத்தத்துக்குப் பின் விசைத்தறிகள் மீண்டும் திங்கள்கிழமை முதல் இயங்கத் தொடங்கின. இந்த ஒருவார காலத்தில் ரயான் நூல் விலை கிலோவுக்கு ரூ. 22 வரை விலை உயா்ந்துள்ளதால் விசைத்தறியாளா்கள் வேதனை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின்போது ஒரு கிலோ ரயான் நூல் ரூ. 150ஆக இருந்தது. படிப்படியாக உயா்ந்து டிசம்பா் 19ஆம் தேதி கிலோ ரூ. 172ஆக உயா்ந்தது. கடந்த 8 நாள்களில் ரூ. 22 விலை உயா்ந்து இப்போது கிலோ ரூ. 194ஆக உள்ளது. இதேபோல பருத்தி நூல் விலை ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ. 50 வரை விலை உயா்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ. 185 ஆக இருந்த பருத்தி நூல் இந்த மாதம் ரூ. 235ஆக உயா்ந்துள்ளது.

விசைத்தறியாளா்கள் கடும் நெருக்கடியில் உள்ள இந்த சூழலில் நூல் விலை உயா்வால் தொழிலைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நூல் விலையை மாதம் ஒருமுறை நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com