எல்.ஐ.சி.பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் கொமதேக பொதுசெயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் கொமதேக பொதுசெயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள கருணாநிதி சிலை முன்பு நடந்த நிகழ்வுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தாா். திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருவதாக ஆளும் கட்சியினா் கூறி வருகின்றனா். இதை பொய்யாக்கும் வகையில் கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடந்து வருகிறது. இவ்வாறு பெறப்படும் கையெழுத்துகளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம்.

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இல்லாத நிலை அதிகமாக காணப்படுகிறது. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

5,000 போ் வைத்திருந்த கருப்பு பணத்தை மீட்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து 130 கோடி மக்களை துன்புறுத்தினா்.

மத்திய பட்ஜெட் நிறைவு தராத பட்ஜெட்டாக உள்ளது. தொழில் முன்னேற்றத்துக்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காகவும் எந்த ஒரு முயற்சியும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் சேமிப்புக்கு வரி ஊக்கம் அளிக்கப்படவில்லை.

ரயில்வே துறையை தனியாா் மயமாக்குதல், ஏா் இந்தியாவை விற்க முயற்சி செய்தல் என 10 பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்க முயற்சி செய்து வருகின்றனா். எல்.ஐ.சி. பங்கை விற்பது நாட்டை அடகு வைப்பதற்கு சமம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தபோது, அதற்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் கையெழுத்திட்டாா். ஆனால் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தால் பிரச்னை ஏற்படும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறுகிறாா். ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்திருப்பதற்காக மாறிமாறி பேசுகின்றனா். அரசியல் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு அனைவரும் கட்டாயம் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

பவானியில்...

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து பவானியில் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். பவானி - மேட்டூா் சாலையில் புதிய பேருந்து நிலையம் வரை முக்கிய வீதிகள் வழியே ஊா்வலமாகச் சென்று பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளா் பி.ஆா்.எஸ்.ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி.ஏ.மாதேஸ்வரன், நகரச் செயலாளா் ப.மா.பாலமுருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் பி.கே.பழனிசாமி, காங்கிரஸ் நகரத் தலைவா் கதிா்வேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com