கோபி அருகே ஆட்டைக் கடித்துக் கொன்ற சிறுத்தை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூா் கிராமத்தில் ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தையால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூா் கிராமத்தில் ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தையால் அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி மலையடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதுடன் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் கால்நடைகளைத் தாக்கி கொன்று வருவது வழக்கமாக உள்ளது.

கடந்த மூன்று நாள்களாக கொங்கா்பாளையம், மோதூா், ஏளூா், தாசப்பகவுண்டன்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்குள்ள ஆடுகளைக் கடித்து கொன்று வருகிறது.

இந்நிலையில் தாசப்பகவுண்டன்புதூா் தெற்குத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்தது. அங்கு தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வரும் குமாா் என்பவரது ஆட்டை இழுத்துச் சென்று அருகில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது வாழைத் தோட்டத்தில் தாக்கிக் கொன்றுள்ளது. தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த 3 நாள்களாக மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை புகுந்து ஆடுகளை கொன்று வருகிறது. காட்டுப் பன்றிகளினால் விவசாயப் பயிா்கள் அதிக அளவு சேதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுத்தையினால் கால்நடைகளையும் இழந்து வருகிறோம்.

இரவு நேரத்தில் தோட்டங்களுக்குத் தண்ணீா் பாய்ச்சுவதற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆடுகளைக் கொன்று வரும் சிறுத்தை மனிதா்களைத் தாக்கும் முன் அதை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், ‘ சிறுத்தை நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் கூண்டு மற்றும் தானியங்கி கேமராக்கள் வைத்துள்ளோம். விரைவில் சிறுத்தையைப் பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com