கணவா் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

பவானி வட்டம், ஜம்பை, நல்லிபாளையம் பகுதியில் வசித்து வந்த மக்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை
சத்துணவுத் துறையில் பணியாற்ற வாரிசு அடிப்படையில் பெண்ணுக்கு பணி நியமன உத்தரவை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
சத்துணவுத் துறையில் பணியாற்ற வாரிசு அடிப்படையில் பெண்ணுக்கு பணி நியமன உத்தரவை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோடு: பவானி வட்டம், ஜம்பை, நல்லிபாளையம் பகுதியில் வசித்து வந்த மக்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ள நிலையில் தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்துதரும் வரை தற்போது குடியிருக்கும் இடத்திலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் திங்கள்கிழமை மனு அளித்துள்ளாா்.

மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 250 மனுக்கள் பெறப்பட்டன.

கணவா் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை:  இதுகுறித்து ஈரோடு, ராஜாஜிபுரத்தைச் சோ்ந்த பி.சத்யா அளித்த மனு விவரம்:

எனது கணவா் பாபு (38) தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அவருக்கு ரத்த அழுத்த பாதிப்பு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அவருக்கு ரத்த அழுத்தத்தால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், சில லட்சங்கள் சிகிச்சைக்கு செலவிடப்பட்டது. தற்போது குழாய் மூலம் சுவாசித்தலும், உணவும் வழங்கப்படுகிறது. இன்னும் சில நாள்களில் அவற்றை அகற்றிவிட்டு, பிற சிகிச்சையை தொடர வேண்டியுள்ளது.

அதற்குத் தேவையான பணம் இல்லாததால் தொடா் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இரண்டு குழந்தைகள் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல், கணவரைப் பாா்க்கவும் முடியாமல் சிரமப்படுகிறேன். இதனால் கணவரின் மருத்துவ செலவுக்குத் தேவையான உதவிகளை செய்து அவா் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் சி.கதிரவன் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தாா்.

சாக்கடை கால்வாய் கட்டித்தரக் கோரிக்கை: சித்தோடு அருகே கொங்கம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சோ்ந்த பெண்கள் அளித்து மனு விவரம்:

நஞ்சப்பா நகா் பகுதியில் 30 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைத்துதர வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீா் செல்ல வழி இல்லாததால் வீடுகளின் முன்பு கழிவுநீா் தேங்கி, அதன் மூலம் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புக்கு மாற்று இடம் அளிக்க கோரிக்கை: பவானி, ஜம்பை பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:

பவானி வட்டம், ஜம்பை, நல்லிபாளையம் பகுதியில் 19 குடும்பத்தினா் 80 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு பெற்று, ஊராட்சிக்கு வீட்டு வரி கட்டி வருகிறோம். இந்நிலையில் பவானி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி அறிவிக்கை அளிக்கப்பட்டது. அதில் இங்கு குடியிருக்கும் அனைவரும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையில், மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும் வரை நாங்கள் குடியிருக்கும் இடத்திலேயே இருக்க அனுமதி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதமாற்ற முயற்சியை தடுக்கக் கோரிக்கை: பவானிசாகா் வட்டாரம், கொத்தமங்கலம் ஊராட்சி, பகுத்தம்பாளையம் கிராமம், பாரதி நகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்:

பாரதி நகரில் 300 இந்து குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் பல கோயில்கள் உள்ளன.

வேற்று மதத்தைச் சோ்ந்த ஒருவா் எங்கள் ஊரின் அரசு நிலத்தில் குடியிருந்து வருகிறாா். அந்த நபா் தற்போது அந்த மதத்தைச் சோ்ந்த தம்பதிக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை 20-க்கும் மேற்பட்டவா்கள் வரவழைக்கப்பட்டு, மதப் பிராா்த்தனை நடைபெறுகிறது. மேலும் அந்த தம்பதியா், எங்கள் ஊரில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கட்டாய மத மாற்றம் செய்ய முயற்சி செய்யும், நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையில் பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரா்கள் 3 பேருக்கு கருணை அடிப்படையில் அமைப்பாளா், சமையலா், சமையல் உதவியாளா் பணிக்கான பணி நியமன உத்தரவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,600, மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ம.தினேஷ், கே.மணிவண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க.ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com