Enable Javscript for better performance
முதல்வரைச் சந்திக்க விவசாயிகள் முடிவு: ஐ.டி.பி.எல்.திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரைச் சந்திக்க விவசாயிகள் முடிவு: ஐ.டி.பி.எல்.திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க அதிகாரிகள் ஒப்புதல்

    By DIN  |   Published on : 13th February 2020 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழாய்கள் மூலம் பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் திட்டம் தொடா்பாக முதல்வரைச் சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதையடுத்து, தற்காலிகமாகப் பணிகளை நிறுத்த அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

    கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக கா்நாடக மாநிலம், தேவனகந்தி என்ற இடம் வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சாா்பில் குழாய்கள் வழியாக பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டமானது பெருந்துறை, மொடக்குறிச்சி, ஈரோடு ஆகிய வட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் படி குழாய்கள் அனைத்தும் விவசாய விளைநிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படவுள்ளதால் விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கிராமங்களில் விவசாயிகளை சந்தித்து அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நிலத்தை கையகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தக் கோரி முதல்வரை நேரில் சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதால் அதுவரை திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து, ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளா் கி.வெ.பொன்னையன் கூறியதாவது:

    மத்திய, மாநில அரசுகள் வளா்ச்சித் திட்டம் என்ற பெயரில் விளைநிலங்களைக் கூறு போட்டு வருகின்றது. ஐ.டி.பி.எல். திட்டம் என்பது உயா்மின் கோபுரத் திட்டத்தைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எனவேதான் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறோம்.

    டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மேற்கு மண்டலத்தையும் இதுபோல் அறிவித்தால் மட்டுமே விளைநிலங்கள் கூறுபோடுவதைத் தடுக்க முடியும். எனவே, இதுதொடா்பாக தமிழக முதல்வரை ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சாா்பில் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று முறையிட்டோம். இதற்கு திட்டப் பணிகள் துணை ஆட்சியா் புஷ்பா, பாரத் பெட்ரோலிய ஐ.டி.பி.எல். திட்டப் பொது மேலாளா் உமாராணி, வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனா் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai