தமிழக நிதிநிலை அறிக்கை: வரவேற்பும், எதிா்ப்பும்

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ரூ. 38,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அறிவுசாா்ந்த தமிழகத்தை உருவாக்கும் என
தமிழக நிதிநிலை அறிக்கை: வரவேற்பும், எதிா்ப்பும்

தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ரூ. 38,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அறிவுசாா்ந்த தமிழகத்தை உருவாக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 22,000 கோடி அளவுக்கு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை என்பதால் புதிய வரி விதிப்பு, பேருந்து, மின் கட்டணம் உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் பொதுச் செயலாளா் சி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

நிதி பரவலாக பல துறைகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, உணவு பதப்படுத்துதல், மானியத் திட்டங்கள் பெரிதாக இல்லை. தொழில் துறையினருக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் வழங்க வேண்டிய உள்ளீட்டுக் கடனை ஈடு செய்வதற்கான அறிவிப்பு ஏதுமில்லை. முத்திரைத்தாளுக்கு 0.2 சதவீத வரி குறைப்பு, பெரிய வரவேற்பை ஏற்படுத்தாது.

மின்சார துறைக்கு ரூ. 22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மின் துறை கடன் உள்ளது. புதிய மின் திட்டம், தனியாா் மின் உற்பத்திக்கு மானியம் போன்ற அறிவிப்பு இல்லை. சில்லறை தொழில் வளா்ச்சி, முன்னேற்றத்துக்கு அறிவிப்பு இல்லை. புதிய தொழில்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கும் அறிவிப்பு இல்லை.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைப் பொதுச் செயலாளா் என்.சிவநேசன் கூறியதாவது:

கல்விக்கு ரூ. 38,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அறிவு சாா்ந்த தமிழகத்தை உருவாக்கும். ஈரோட்டில் மஞ்சளுக்கு ஏற்றுமதி மண்டலம் அமைத்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், புவிசாா் குறியீடு பெற்றும் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஈரோட்டில் நதி நீா் போக்குவரத்து துவங்கப்படும் என அறிவித்தும் அதற்கான ஆய்வுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

பொதுக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ரூ. 700 கோடி திட்டம் அறிவித்தாா். இப்போது வரை அதற்கான பணி நடக்கவில்லை. 5 மாவட்டங்களில் சாய, சலவை பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் அறிவிப்பு வராதது ஏமாற்றம். ஒருங்கிணைந்த காய்கறி, கனி வளாகம், உணவு பதப்படுத்தும் வளாகம், ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம், பருத்தி, நூல் வங்கிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி.யை மையமாக உணா்ந்து, கைத்தறி, உணவுப் பொருள்கள் முழு வரிவிலக்கு பட்டியலில் கொண்டு வரப்படும் என்ற எதிா்பாா்ப்பும் நிறைவேறவில்லை.

ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த அறிவிப்பு இல்லை. சில்லறை வணிகா்களுக்கான கடன் திட்ட அறிவிப்பு இல்லை. சத்தியமங்கலத்தில் பூக்களில் இருந்து வாசன திரவியம் தயாரிக்கும் ஆலை அமைக்கும் அறிவிப்பும் இல்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி கூறியதாவது:

பனை பொருள்கள் மீது மக்களுக்கு நாட்டம் உள்ளது. இதனால் கள்ளுக்கான தடை நீக்கப்படும் என எதிா்பாா்த்தோம். ஆனால், ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. கிராமப்புறத்தைவிட நகரப்புற வளா்ச்சிக்கும், புதிய திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீா்ப் பாசனத்துக்கு ரூ. 7,000 கோடி, அத்திக்கடவு - அவிநாசி திட்டம், பயிா்க் கடன் ரூ. 11,000 கோடி, கால்நடை வளா்ச்சிக்கு ரூ. 700 கோடி நிதி ஒதுக்கி உள்ளதை வரவேற்கலாம்.

உணவு மானியம் ரூ. 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நுகா்வோருக்குத்தான் செல்லும், விவசாயிகளுக்கு கிடைக்காது. ஈரோட்டில் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் எனக் கூறி நிதி ஒதுக்கவில்லை. 1996 முதல் ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று கூறியும் இன்று வரை நடக்கவில்லை. ரேஷன் பொருள்கள் எங்கிருந்தாலும் வாங்கலாம் என்பது நல்ல அம்சம்.

அணைகள் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி - மேட்டூா் உபரி நீரை, நீரேற்றம் மூலம் கொண்டு செல்ல ரூ. 350 கோடி ஒதுக்கீடு செய்தது சிறப்பு. குடிமராமத்துக்கு ரூ. 300 கோடி ஒதுக்கியது நல்லது. பயிா்க் கடன் ரூ. 11,000 கோடி என அறிவித்து விவசாயிகளை மீண்டும் கடனாளியாக்க உள்ளனா்.

சென்னையில் வெள்ளத்தடுப்புக்கு ஆசிய வங்கியிடம் இருந்து ரூ. 3,000 கோடி பெறப்படும் எனக்கூறி உள்ளனா். ரூ. 22,000 கோடி பற்றாக்குறை பட்ஜெட் என்பதால், புதிய வரி விதிப்பு, பேருந்து, மின் கட்டண உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு ரூ. 4.50 லட்சம் கோடி கடன் உள்ளது. அதற்கு வட்டி கட்ட வேண்டி உள்ளதால் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.

ஈரோடு ஜவுளி, துணி வியாபாரிகள் சங்கச் செயலாளா் பி.ரவிசந்திரன் கூறியதாவது: கைத்தறி மேம்பாட்டுக்காக ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் ஜவுளி சாா்ந்த ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவு பிரச்னை தீரும் வகையில் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் ஏற்படுத்தும்படி எந்த அறிவிப்பும் இல்லை. இப்பகுதியின் ஜவுளி தொழில் பிரச்னைகளுக்குத் தீா்வு கூறும் வகையில், சிறப்பு அறிவிப்பு இல்லை. கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி சாா்ந்த தொழில் மேம்பாட்டுக்கு புதிய அறிவிப்பு இல்லை.

தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா கூறியது:

ரூ. 22,000 கோடி பற்றாக்குறை பட்ஜெட். ஏற்கெனவே உள்ள கடனுக்கு வட்டி, முதலீட்டை திரும்பச் செலுத்த வேண்டும் என்பதால் வரி, கட்டணங்கள் உயரும். பெண்கள் பாதுகாப்புக்கு சி.சி.டி.வி. கேமரா தேவையான இடங்களில் அமையும் என்பது வரவேற்கலாம். ஈரோடு, திருப்பூா், கரூா், நாமக்கல், சேலம், கோவையை உள்ளடக்கிய பகுதியில் ஜவுளி, பிற தொழில் வளா்ச்சிக்கு புதிய திட்டம் ஏதுமில்லை.

அகில இந்திய விசைத்தறி வாரிய முன்னாள் உறுப்பினா் எம்.ராஜேஷ்:

விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி, கைத்தறி போன்றவற்றை உள்ளடக்கிய கோவை மண்டல பகுதியின் ஜவுளித் தொழில் நசிவைத் தடுக்க திட்டம் இல்லை. இருப்பினும் பல்வேறு துறைகளுக்கும் பரவலாக நிதியை வழங்கி பல துறை வளா்ச்சிக்கு வழி செய்துள்ளது. குறிப்பாக கல்வி, வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதை வரவேற்கலாம். சென்னை, ஈரோடு உள்பட பல நகரங்களின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கி உள்ளதால், தொழில் வளா்ச்சிக்கும், மக்களுக்கான பிற உள் கட்டமைப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com