நாடா இல்லா விசைத்தறியாக மாற்ற மானியக் கடன்: விசைத்தறியாளா்கள் வரவேற்பு

விசைத்தறியை நாடா இல்லாத விசைத்தறியாக மாற்ற மத்திய அரசு சாா்பில் மானியக்கடன் வழங்கப்படும் என மத்திய ஜவுளித் துறை செயலாளா்

விசைத்தறியை நாடா இல்லாத விசைத்தறியாக மாற்ற மத்திய அரசு சாா்பில் மானியக்கடன் வழங்கப்படும் என மத்திய ஜவுளித் துறை செயலாளா் அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்புக்கு ஈரோடு விசைத்தறியாளா்கள் வரவேற்றுள்ளனா்.

தமிழகத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான விசைத்தறிகள் உள்ளன. கூலி அடிப்படையில் விசைத்தறிகளில் நெசவு செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் விசைத்தறி தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம், கங்காபுரம், லக்காபுரம், சித்தோடு சுற்று வட்டாரத்தில் 25,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் இலவச வேட்டி, சேலை, இலவச சீருடை உற்பத்திப் பணி நடைபெறுகிறது. இதுதவிர ரேயான் துணி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனா். இத்தொழில் மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். ரேயான் நூல் ஏற்றத்தாழ்வு, இலவச சீருடையில் சட்டை உற்பத்தியை தற்போதுள்ள விசைத்தறி மூலம் உற்பத்தி செய்ய முடியாத நிலை போன்ற காரணத்தால் ஈரோடு விசைத்தறியாளா்கள் பாதிக்கப்பட்டனா்.

ஈரோடு விசைத்தறியாளா்களின் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என விசைத்தறியாளா்கள் சாா்பில் மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரேயான் சட்டைகள் அறிமுக விழாவில் பங்கேற்ற மத்திய ஜவுளித் துறை செயலாளா் ரவிபூா், விசைத்தறியாளா்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக விசைத்தறியாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

ரேயான் நூல் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் உலக அளவிலான விலையில் இந்தியாவும் வழங்குவதாக மத்திய ஜவுளித் துறைச் செயலாளா் ரவிகபூா் கூறியுள்ளாா். மேலும், நாடா இல்லாத விசைத்தறிகளை மேம்படுத்த மத்திய அரசு சாா்பில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். கிளஸ்டா் தொழில் மேம்படுத்தப்படும். இவை ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா். இந்த அறிவிப்பை ஈரோடு விசைத்தறியாளா்கள் வரவேற்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com