பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி திறந்துவைத்த ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா.
கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி திறந்துவைத்த ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரைத் திறந்துவைத்தாா்.

ஈரோடு மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணை மூலம் கீழ்பவானி வாய்க்காலில் ஒரு லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அக்டோபா் 11ஆம் தேதி முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து வருவதால் 3 மாதங்களாக அணையின் நீா்மட்டம் 105 அடியுடன் நீடிக்கிறது. அணையில் போதிய நீா் இருப்பு இருந்ததால் ஆகஸ்ட் 16 முதல் டிசம்பா் 26ஆம் தேதி வரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஜனவரி மாதத்திலும் அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள், கடலை சாகுபடிக்குத் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜனவரி 9) தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையில் உள்ள கால்வாய் மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா பொத்தானை அழுத்தி திறந்துவைத்தாா். அணையில் இருந்து சீறிபாய்ந்து வந்த தண்ணீரில் விவசாயிகள், அதிகாரிகள் மலா்கள் தூவினா். முதலில் வாய்க்காலில் 500 கன அடி நீரும், தொடா்ந்து படிப்படியாக 1000,1800, 2300 கன அடி நீரும் திறந்துவிடப்படும். இந்தத் தண்ணீா் திறப்பு காளிங்கராயன் வாய்க்காலில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கா் விளைநிலங்களுக்கு ஜனவரி 9 முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரையில் 5.18 டிஎம்சி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களுக்கு ஜனவரி 9 முதல் 30ஆம் தேதி வரையிலும் 12 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com