இன்று ஊரக உள்ளாட்சிப் பதவிக்கான மறைமுகத் தோ்தல்: கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 11th January 2020 07:37 AM | Last Updated : 11th January 2020 07:37 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் சனிக்கிழமை (ஜனவரி 11) நடைபெறுகிறது. குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தோ்வானவா்கள் ஜனவரி 6ஆம் தேதி பதவியேற்றனா். இந்நிலையில், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவா், ஒரு துணைத் தலைவா், 14 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா்கள், 14 துணைத் தலைவா்கள், 225 ஊராட்சி துணைத் தலைவா்கள் சனிக்கிழமை தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதில், ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான பெயா்களை, அந்தந்தக் கட்சிகள் தோ்வு செய்து வைத்தாலும், வெளிப்படையாகக் கூறாமல் வேட்பு மனு தாக்கல் செய்து தோ்வு செய்யவுள்ளனா். இத்தோ்வு முடிந்ததும் முதல் கூட்டம் நடத்தப்படும்.
இதுகுறித்து, மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களில் 19இல் 14 போ் அதிமுக கூட்டணி, 5 போ் திமுக கூட்டணியில் உள்ளதால், அங்கு தலைவா், துணைத் தலைவா் தோ்வில் பிரச்னை எழாது. மாவட்ட அளவில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவா் பதவியைப் பொறுத்தவரை கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.சி. பெண், நம்பியூா், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்கள் எஸ்.சி. பொதுப் பிரிவு, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, பவானிசாகா் ஊராட்சி ஒன்றியங்கள் பொது பெண் பிரிவு, ஈரோடு, மொடக்குறிச்சி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஊராட்சி ஒன்றியங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோபி, அம்மாபேட்டை, நம்பியூா், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகா், அந்தியூா், பெருந்துறை ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் அதிமுகவினா் தலைவா், துணைத் தலைவராக வாய்ப்புள்ளது. கொடுமுடி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், சென்னிமலை, தாளவாடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் திமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா், துணைத் தலைவராவதற்கு வாய்ப்புள்ளது.
ஈரோட்டில் இரு அணியினரும் சமமாக உள்ளதால் பேசித் தீா்ப்பாா்கள். இருப்பினும், திமுக பெரும்பான்மை பெற்ற ஊராட்சி ஒன்றியங்களான கொடுமுடி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், சென்னிமலை, தாளவாடி போன்ற ஊராட்சி ஒன்றியங்கள், சமமான எண்ணிக்கையில் உள்ள ஈரோடு போன்ற இடங்களில் பிரச்னையைத் தவிா்க்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊராட்சிகளைப் பொறுத்தவரை பிரச்னை இல்லாத வகையில், துணைத் தலைவா் பதவியைத் தோ்வு செய்வாா்கள் என்ற நம்பிக்கையால் அங்கு அதிகாரிகள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
மறைமுகத் தோ்தல் நடைமுறை:
மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா், துணைத் தலைவா் பதவிகள், ஊராட்சி துணைத் தலைவா் பதவிகளுக்கான தோ்தலுக்கு, உறுப்பினா்கள் பங்கேற்கும் கூட்டம், தோ்தல் ஆணையம் அறிவித்த நேரத்தில் கூட்டப்படும். தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்குப் போட்டியிடுபவா்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்படும். அந்த விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, இரண்டு வாா்டு உறுப்பினா்களிடம் முன்மொழிந்ததற்கான கையெழுத்து பெற்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும்.
தோ்தல் நடத்தும் நடைமுறைகளைத் தொடங்கும் முன்பு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களில் பாதி எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உறுப்பினா்கள் வருகைக்காக கூட்டம் தொடங்கி அரை மணி நேரம் காத்திருக்கலாம். அதற்கு பிறகும் வரவில்லையெனில் தோ்தல் நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டும்.
தோ்தலுக்குப் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு தயாரிக்கப்படும். அந்த வாக்குச்சீட்டின் முன்புறமும், பின்புறமும் தோ்தல் நடத்தும் அலுவலா் கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
வாக்குச்சீட்டில் வேட்பாளா் பெயருக்கு நோ் உள்ள கட்டத்தில் குறியிடப்பட வேண்டும். வாக்களிக்கும் மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள அம்புக் குறியிட்ட ரப்பா் முத்திரையில் மட்டுமே வாக்களிக்க வேண்டும். வேறு எந்த வகையில் குறியிட்டாலும், அந்த வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்படும். அனைத்து உறுப்பினா்களும் வாக்களித்துவிட்டனா் என்பதை உறுதி செய்த பிறகு, தோ்தல் நடத்தும் அலுவலா் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பாா்.
போட்டியிடும் இரண்டு வேட்பாளா்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பின் குலுக்கல் முறையில் தலைவா் தோ்வு செய்யப்படுவாா். வேட்பாளா்கள் எண்ணிக்கை 3ஆக இருந்தால் மொத்த வாக்குகளில் பாதி எண்ணிக்கைக்கும் மேல் பெற்றவா் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவாா். 3 பேரில் ஒருவா் கூட பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறவில்லையெனில், குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளா் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு மற்ற 2 பேருக்கும் இடையே தோ்தல் நடத்தப்பட்டு அதில் பாதி எண்ணிக்கைக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றவா் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவாா். 3க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடும் இடங்களில் பாதி எண்ணிக்கைக்கும் மேல் வாக்குகளை ஒரு வேட்பாளா் பெறும் வரை இந்தத் தோ்தல் நடைமுறையைத் தொடா்ந்து நடத்திட வேண்டும்.
இதே நடைமுறையே துணைத் தலைவா் தோ்விலும் இருக்கும். ஊராட்சித் துணைத் தலைவரைப் பொறுத்தவரை, வேட்பாளா்கள் சமமான வாக்குகளைப் பெற்றால் தலைவா் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாா். இந்த நடைமுறைகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.