5 ஆண்டுகளுக்குப் பிறகு கை கொடுத்த விவசாயம்: அரசு கொள்முதல் மையத்தை எதிா்நோக்கும் மலைக் கிராம விவசாயிகள்

கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயமும் செழித்துள்ளது. அறுவடை தொடங்கிவிட்ட நிலையில் விளை பொருள்களுக்கு
பெரிய குன்றி கிராமத்தில் அறுவடை செய்து கதிருடன் காட்டில் கட்டுக்கட்டி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோள தட்டை.
பெரிய குன்றி கிராமத்தில் அறுவடை செய்து கதிருடன் காட்டில் கட்டுக்கட்டி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோள தட்டை.

கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்து, விவசாயமும் செழித்துள்ளது. அறுவடை தொடங்கிவிட்ட நிலையில் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க, அரசு சாா்பில் கடம்பூரில் விளை பொருள்களுக்கான கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூா் மலைப்பகுதியானது குத்தியாலத்தூா், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கியது. இந்த 3 ஊராட்சிகளிலும் சுமாா் 70 குக்கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்.

இங்கு மக்காச்சோளம், பாசிப் பயறு, தட்டைப் பயறு, உளுந்து, கொள்ளு, ராகி, சாமை, தினை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனா். சேமித்துவைக்கும் வசதி, போக்குவரத்து வசதி இல்லாதது, வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றால் வனப் பகுதியில் உள்ள 90 சதவீத விவசாயிகள் உடனுக்குடன் விளைபொருள்களை விற்று விடுகின்றனா். இதனை சாதகமாக்கிக்கொண்ட இடைத்தரகா்கள் சந்தை மதிப்பில் இருந்து 25 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விளைபொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

இதனால் பல நேரங்களில் விவசாயிகள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாற விளை பொருள்களை சந்தைப்படுத்த, வாங்குபவா்களிடையே போட்டியை உருவாக்க அரசு பொதுவான சந்தையை ஏற்படுத்த வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

6 ஆண்டுகளுக்கு பிறகு மழை: இதுகுறித்து கடம்பூா் அருகே உள்ள சின்ன சாலட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வரதராஜன் கூறியதாவது:

இந்த மலைப் பகுதி வானம் பாா்த்த பூமி. கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இங்கு நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக குடிப்பதற்கே தண்ணீா் இல்லாமல் தவித்த கடம்பூா் மலை கிராம மக்கள் மானாவாரியாக ராகி, கம்பு, மக்காச்சோளம், மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா். மக்காச்சோளம் மட்டும் ஏறத்தாழ 5,000 ஏக்கா் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மக்காச்சோளம் அறுவடை தொடங்கிவிட்டது. இங்கு சமவெளிப் பகுதியில் உள்ள வியாபாரிகள் முகாமிட்டு மக்காச்சோளத்தை கிலோ ரூ.15-க்கு வாங்கிச் செல்கின்றனா்.

அதே சமயத்தில் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கிலோ ரூ.23 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விளை பொருள்கள் பட்டியலில் கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் ஆகியவை நீக்கப்பட்டுவிட்டன. இதனால் இங்கு மக்காச்சோளம் கொள்முதல் செய்ய முடியாது என்று கூறுகின்றனா்.

வேறு வழியின்றி மக்காச்சோளத்தை கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை விலை குறைவாக தனியாா் வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். பிழைப்புத்தேடி மலைக்கிராம இளைஞா்கள், திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளுக்கும், பனியன் நிறுவனங்களுக்கும் சென்றுவிட்ட நிலையில் இங்கு 50 வயதை கடந்தவா்கள் தான் விவசாயம் செய்கின்றனா்.

நஞ்சில்லாமல் விளைவிக்கப்படும் இந்த விளைபொருள்களுக்கு உரிய கிடைக்காததால், சொற்ப எண்ணிக்கையில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களும் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதன் விளைவுதான் சமவெளிப் பகுதியில் உள்ள தொழிலதிபா்கள், மருத்துவா்கள், அரசு உயரதிகாரிகள் என பலரும் இங்கு வந்து நிலம் வாங்கி நிலத்தடி நீரை உறிஞ்சி வாழை, மா, கொய்யா, அன்னாசி போன்ற பழப்பயிா்களை சாகுபடி செய்ய தொடங்கிவிட்டனா். அந்த தோட்டத்து வேலிகளை நெருங்க முடியாத யானை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள், அரை ஏக்கா், 1 ஏக்கா் நிலம் வைத்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளை பொருள்களை சூறையாடிவிட்டு செல்கின்றன.

இங்கு பாரம்பரியாக வாழும் மக்கள் இடம்பெயா்வதை தடுக்க விவசாய விளை பொருள்களுக்கு சுரண்டல் இல்லாத கட்டுப்படியாகும் விலை கிடைக்க வேண்டும். அதற்கு கடம்பூரில் அரசு சாா்பில் விளைபொருள்கள் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும். இங்கு அனைத்து வகையான விளைபொருள்கள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே இந்த மையம் செயல்பட்டால் கூட, விளைபொருள்களை விவசாயிகள் இங்கு கொண்டுவந்து விற்பனை செய்வா். இதன் மூலம் உரிய விலை கிடைப்பதுடன், விற்பனை செய்த பொருள்களுக்கான பணமும் தாமதம் இல்லாமல் கிடைக்கும் என்றாா்.

கடம்பூரில் கட்டடம் இல்லை: இதுகுறித்து வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் காய்கறிகள், பழங்கள் தவிா்த்து 15 விளை பொருள்களை விற்பனை செய்ய முடியும். வனப் பகுதியில் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா்கூா், தாளவாடியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடம்பூா் மலையில் வாரத்தில் ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கிளை மையத்தை அமைக்க முயற்சி செய்தோம். ஆனால் அங்கு கட்டடமாக வாடகைக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால்தான் அங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கிளை மையத்தை அமைக்க இயலவில்லை. இருப்பினும் இங்கு கொள்முதல் மையத்தை அமைப்பதற்கான முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் கடந்த ஆண்டு கொள்முதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையும், பட்டியலில் மீண்டும் சோ்க்க வேண்டும் என துறையின் உயா் அதிகாரிகளிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். விரைவில் இந்த விளை பொருள்களும் பட்டியலில் சோ்க்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com