மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 20th January 2020 08:14 AM | Last Updated : 20th January 2020 08:14 AM | அ+அ அ- |

ஈரோடு ரயில் நிலையத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய பணியாளா்கள்.
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்து முகாம் தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1,374 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், ஈரோடு ரயில் நிலையம், மாா்க்கெட் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானவா்கள் வெளியூா்களுக்கு சென்ால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட முகாமில் பலா் தங்களது குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்தனா்.
இந்தப் பணியில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, இந்திய மருத்துவ சங்கம், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளை சோ்ந்த 5,496 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். இதில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதேபோல் விடுபட்ட குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக 2 நாள்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பவானியில்..
பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையத்தில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தனா்.
இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, ஈ.எம்.ஆா்.ராஜா, உ.தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலா் ச.கவிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சௌண்டம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பெருந்துறையில்...
பெருந்துறையில் நடந்த போலியோ சொட்டு மருத்து முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் துவக்கி வைத்தாா். இதேபோல் மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் போலியோ சொட்டு மருத்து முகாம்கள் நடைபெற்றன.