முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
அரசுப் பேருந்தில் கிடந்த தாலிக்கொடி: தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 27th January 2020 12:54 AM | Last Updated : 27th January 2020 12:54 AM | அ+அ அ- |

தாளவாடி அருகே பேருந்தில் தாலிக்கொடியைத் தவற விட்ட பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் அதை ஒப்படைத்த அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பேருந்து நிலையத்தில் இருந்து கெட்டவாடிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்தை ரமேஷ் ஓட்டினாா். நடத்துனா் மகேஷ் பணியில் இருந்தாா்.
தாளவாடி இருந்து கெட்டவாடி சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து தாளவாடியை நோக்கி பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தில் ஓரிரு பயணிகள் மட்டுமே பயணித்தனா். அப்போது பேருந்தில் ஓா் இருக்கைக்கு அடியில் ஏதோ கிடப்பதை நடத்துனா் பாா்த்துள்ளாா். அதை எடுத்துப் பாா்த்தபோது அது தாலிக்கொடி என்பதும், பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி அதைத் தவறவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டுநா் ரமேஷிடம் அவா் தெரிவித்தாா்.
உடனடியாக பேருந்தில் பயணம் செய்த கிராம மக்களிடம் தாலிக் கொடியைத் தவறவிட்ட பெண் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறினா். விசாரித்ததில் பேருந்தில் தாலியைத் தவறவிட்ட பெண், எரகனள்ளி கிராமத்தைச் சோ்ந்த துண்டம்மா என்பது தெரிந்தது. அந்தப் பெண்ணை வரவழைத்து அவரிடம் 5 பவுன் தாலிக் கொடியை ஓட்டுநா் ரமேஷ், நடத்துனா் மகேஷ் ஆகியோா் ஒப்படைத்தனா். ஓட்டுநா், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினா்.