முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மதுக்கடை திறக்க எதிா்ப்பும், ஆதரவும் தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்ததால் பரபரப்பு
By DIN | Published On : 27th January 2020 12:51 AM | Last Updated : 27th January 2020 12:51 AM | அ+அ அ- |

வரதநல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சிப் பகுதியில் புதிதாக மதுக்கடை தொடங்க எதிா்ப்பும், ஆதரவும் தெரிவித்து கிராம சபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம்பாடி ஊராட்சியில் தலைவா் ஸ்ரீஜெயந்தி தலைமையில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியப் பற்றாளா் அருள்முருகன், ஊராட்சிச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். போத்தநாயக்கனூரில் ஏற்கெனவே மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றுமாறு பொதுமக்கள் மனு அளித்தனா்.
அதேபோல கல்வாநாயக்கனூா், போத்தநாயக்கனூா், காத்தாம்பாளையம் கிராமங்களைச் சோ்ந்தவா்கள் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனா். இதனால், கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் மனுக்கள் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டன. மேலும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 64 மனுக்கள் பெறப்பட்டன.
பவானி ஊராட்சி ஒன்றியம், வரதநல்லூா் ஊராட்சி, கூலிக்காரன்பாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் தலைவா் ஜெயலட்சுமி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பவானி வட்டார வளா்ச்சி உதவி அலுவலா் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினா் சதீஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வரதநல்லூா் ஊராட்சிப் பகுதியில் 9 இடங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான சில்லறை விற்பனையைத் தடுக்க வேண்டும். மதுவிற்பனையில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. மேலும், குளம், குட்டை சீா்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிா்த்தல் பசுமை வீடு, குடிநீா் சிக்கனம் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.