குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: பாஜகவினா் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 27th January 2020 12:50 AM | Last Updated : 27th January 2020 12:50 AM | அ+அ அ- |

ஈரோடு ஈஸ்வரன் கோயில் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கையை வழங்கிய ராஜ்லட்சுமி மந்தனாவுடன் பாஜகவினா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாஜக சாா்பில் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையைச் சோ்ந்த கின்னஸ் சாதனையாளரான ராஜ்லட்சுமி மந்தா, கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளாா். இவா் ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தாா்.
அவருக்கு ஈரோடு திண்டலில் பாஜக தெற்கு மாவட்டம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அவருடன் இணைந்து கட்சியினரும் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனா். திண்டலில் தொடங்கிய பேரணி, பழையபாளையம், குமலன்குட்டை, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு, காமராஜா் சாலை, ஈஸ்வரன் கோயில், மூலப்பட்டறை, கருங்கல்பாளையம் வழியாக காவிரிக்கரை வரை சென்றது. இதில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மாநில செயலாளா்கள் சரஸ்வதி, பாலகணபதி, மாவட்ட பொதுச்செயலாளா் குணசேகா், செயலாளா் கிருஷ்ணகுமாா், கல்வியாளா் பிரிவு மாவட்ட துணைத்தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.