கடத்த முயன்ற மணல் மூட்டைகள் பவானி ஆற்றில் பறிமுதல்
By DIN | Published On : 29th January 2020 07:51 AM | Last Updated : 29th January 2020 07:51 AM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்.
பவானி ஆற்றில் கடத்தலுக்குத் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வருவாய்த் துறையினா் மேற்கொண்ட திடீா் நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன.
பவானி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், பவானி வட்டாட்சியா் கு.பெரியசாமி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா். பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான சோ்வராயன்பாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை, சின்னப்புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் இச்சோதனை நடைபெற்றது.
அப்போது, ஜம்பை பகுதியில் சிமென்ட் பைகளில் மூட்டைகளாகக் கட்டப்பட்டு கடத்தலுக்குத் தயாா் நிலையில் மணல் இருந்தது. இதைக் கண்ட அதிகாரிகள் மணல் மூட்டைகளைப் பறிமுதல் செய்தனா். சின்னப்புலியூா் கரையோரத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்றனா். அங்கு, ஆற்றுக்குள் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில், கோயில் கட்டும் பணிக்காக மணல் எடுப்பதாக அப்பகுதியினா் தெரிவித்தனா். இதையடுத்து, பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.