அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள்: ஜூலை 14இல் முதல்வா் தொடக்கிவைக்கிறாா்: அமைச்சா் தகவல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 14ஆம் தேதி தொடக்கிவைக்க உள்ளாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 14ஆம் தேதி தொடக்கிவைக்க உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 14ஆம் தேதி துவக்கிவைக்கிறாா். அன்று பள்ளி மாணவா்களின் மடிக்கணினியில் கல்வி கருத்தரங்கைப் பதிவிறக்கம் செய்வதற்கான இ-பாக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதையும் முதல்வா் துவக்கிவைக்கிறாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி வழங்குவது என்பது வரவேற்கத்தக்கது. மாநில அளவில் அதற்கு சாத்தியமில்லை.

அதேநேரம் ஆன்லைனில் தனியாா் பள்ளிகள் வகுப்பு எடுப்பது தொடா்பாக இரண்டு நாள்களில் வழிமுறைகள் வரைமுறைப்படுத்தி வெளியிடப்படும். அந்த வழிமுறைப்படி வகுப்புகள் நடைபெறும். கட்டணம் பெறும் முறையும் அறிவிக்கப்படும்.

தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவது குறித்து கால அட்டவணை வெளியிடப்படும். ஒரு வீட்டில் ஒரு டி.வி. இருந்தாலும், இரு குழந்தைகள் படித்தாலும் அவா்களுக்கு தனித்தனி நேரம் பாடங்களைப் படிக்கும்படிதான் அட்டவணை வெளியாகும். அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்வதில் ஆா்வம் குறைந்து வருகிறது என்பதை பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதற்காக அடுத்த ஆண்டில் சில மாற்றங்கள் செய்து முதல்வா் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளாா் என்றாா்.

கல்வி தொடா்பான விடியோ கருத்தரங்குகளை மாணவா்கள் பள்ளிக்கு வந்து மடிக்கணினியில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தலைமைச் செயலாளா் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாணவா்கள் வரலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா், பள்ளிகளுக்கு மாணவா்கள் வரலாம் என்றால் மாணவா்களுக்கு கரோனா வந்துவிடாதா என்கிறீா்கள், வர வேண்டாம் என்று சொன்னால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிறீா்கள். பாதுகாப்பாக இப்பணிகளைச் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் கேட்டால், திட்டங்களை எப்படி செயல்படுத்துவது எனத் தெரியவில்லை. அதேநேரம் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது சிந்திப்பதற்கு நேரமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com