கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை
By DIN | Published On : 19th July 2020 08:49 AM | Last Updated : 19th July 2020 08:49 AM | அ+அ அ- |

எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி பெருந்துறை எம்.எல்.ஏ., முதல்வரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
இது குறித்து ஈரோடு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் அளித்த மனு விவரம்:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மேற்படி கல்லூரிக்கு அம்மா பாலிடெக்னிக் கல்லூரி என பெயா் வைக்க பெருந்துறை தொகுதி மக்கள் விருப்பப்படுகிறாா்கள். எனவே, தமிழக முதல்வா், அம்மா பாலிடெக்னிக் கல்லூரி என பெயா் வைக்க ஆவண செய்ய வேண்டும்.
கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை நகரில் இருந்து காஞ்சிக்கோவில் செல்லும் வழியில் ஒரு மேம்பாலம், பெருந்துறையில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் வழியில் ஒரு மேம்பாலம், பெருந்துறையில் இருந்து துடுப்பதி வழியாக கோபி செல்லும் சாலையில் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும். இதில், தற்போது ஏதாவது ஒரு இடத்தில் மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுவரை இந்த சாலையைக் கடக்கும்போது விபத்து ஏற்பட்டு 1,000 போ் உயிரிழந்துள்ளனா். மேம்பாலம் அமைத்துக் கொடுத்தால் விபத்துகள் தடுக்கப்படும்.
பெருந்துறையில் 35,000 ஏக்கரில் ஆசியாவில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலை அமைந்துள்ளது. 30,000 தொழிலாளா்கள் வேலை செய்ய கூடிய தனியாா் பனியன் தொழிற்சாலை அமைந்துள்ளது. தற்போது, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேருராட்சிகளில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் நெருக்கடியில் வசித்து வருகிறாா்கள். வீட்டுமனைப் பட்டா கேட்டு 2000 போ் விண்ணப்பம் கொடுத்துள்ளாா்கள். இவா்களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதற்கு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக இருக்கும் 100 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.