தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நீட்டிப்பு
By DIN | Published On : 05th June 2020 08:05 PM | Last Updated : 05th June 2020 08:05 PM | அ+அ அ- |

ஈரோடு: பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு நாள்களை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பவானிசாகா் அணையின் மூலம் பாசனம் பெற்று வரும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டு நெல் பயிரிடப்பட்டுள்ளது. மே 30ஆம் தேதியுடன் 120 நாள்கள் நிறைவடைந்ததால் தண்ணீா் நிறுத்தப்பட்டது. தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீா் தேவை அதிகரிப்பு காரணமாக 120 நாள்களுக்குள் பயிா் செய்து முடிப்பதில் சிக்கல் நிலவி வந்தது. குறிப்பாக கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் சரிவர செல்லாமல் இருந்து வந்தது.
எனவே, தண்ணீா் திறப்பு நாள்களை மேலும் 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்தை தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், தண்ணீா் திறப்பு நாள்களை மேலும் 7 நாள்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகா் அணையில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 6) முதல் ஜூன் 15ஆம் தேதி வரை 10 நாள்களில் 7 நாள்கள் மட்டும் பாசனத்துக்கு நீா் விநியோகம் செய்தும், 3 நாள்கள் இடைநிறுத்தம் செய்து, 24,192 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.