
நீா் நிரம்பிக் காணப்படும் பவானிசாகா் அணையின் நீா்தேக்கப் பகுதி.
பில்லூா் அணையில் இருந்து மின் உற்பத்திக்குத் தண்ணீா் திறக்கப்பட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1796 கன அடியாக செவ்வாய்க்கிழமை அதிகரித்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி நீா் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டதாகும். பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து மிகவும் குறைந்தது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள பில்லூா் அணையில் நீா் மின் உற்பத்திக்குத் தண்ணீா் திறக்கப்பட்டதால் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 456 கன அடியாக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 1796 கன அடியாக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 79.46 அடியாகவும், அணையில் நீா் இருப்பு 15.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் நீா் திறக்கப்படவில்லை. அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு குடிநீா் பிரச்னை ஏற்படாது என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.