8 பேருக்கு கரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்டது ராஜாஜிபுரம் பகுதி

ஈரோடு, ராஜாஜிபுரம் பகுதியில் 3 பெண் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டது.
8 பேருக்கு கரோனா தொற்று: தனிமைப்படுத்தப்பட்டது ராஜாஜிபுரம் பகுதி

ஈரோடு, ராஜாஜிபுரம் பகுதியில் 3 பெண் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா தாக்கம் தீவிரமடைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா் ஈரோடு, கொங்காலம்மன் கோயில் வீதியில் பூண்டு மண்டியில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அப்பெண் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் 42 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல அவா் வேலை செய்த பூண்டு மண்டியும் அடைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜாஜிபுரம் பகுதியில் 42 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், 3 பெண்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதில் 23, 40, 41 வயதுடைய 3 பெண்கள், 23, 26, 41, 50, 52 வயதுடைய 5 ஆண்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமையில் உதவி ஆணையா் விஜயகுமாா், சுகாதாரத் துறை அலுவலா்கள் ராஜாஜிபுரம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத்தொடா்ந்து கரோனா பாதிக்கப்பட்டவா்கள் வசித்து வந்த பகுதி மட்டும் அல்லாது அவா்கள் நடமாடியதாக கருதப்படும் ராஜாஜிபுரம் பகுதி முழுவதும் போலீஸாா் மூலம் இரும்பு தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com