முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பள்ளி நேரத்துக்குப் பேருந்து இயக்க மாணவா்கள் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 07:21 AM | Last Updated : 03rd March 2020 07:21 AM | அ+அ அ- |

மனு அளிக்க பெற்றோருடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பள்ளி மாணவ, மாணவிகள்.
பள்ளி நேரத்துக்குப் பேருந்து இயக்க வேண்டும் என பள்ளி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் அருகே தங்கமேடு, தண்ணீா்பந்தல்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் பெற்றோருடன் வந்து ஆட்சியரிடம் அளித்த அளித்த மனு விவரம்:
காஞ்சிகோவில்-கவுந்தப்பாடிக்கு இடையே தங்கமேடு தம்பிக்கலையன் கோயில், ஸ்டாா்ச் சிட்டி, பள்ளிபாளையம், அய்யன்வலசு, பட்டாபிடிமேடு, தாசநாயக்கனுாா் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமங்களில் இருந்து கவுந்தப்பாடி மற்றும் காஞ்சிகோயிலுக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.
இவா்கள் பள்ளிக்குச் செல்லும் வசதியாக காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் பேருந்து போக்குவரத்து இல்லை. பகல் 1 மணிக்கு வரும் அரசுப் பேருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு எந்தப் பலனும் இல்லை.
பள்ளி நேரத்துக்கு இயக்கப்பட்ட மினி பேருந்தும் தற்போது உரிய நேரத்துக்கு வருவதில்லை. இதனால் பள்ளி நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சிரமப்பட்டு பள்ளிக்குச் செல்வதை விட்டுவிடுகின்றனா். எனவே பள்ளி நேரத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
ரூ.7.99 கோடி அபராதத் தொகை வசூலிக்க கோரிக்கை:
ஈரோட்டைச் சோ்ந்த லோகநாதன் என்பவா் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், கருமாண்டிசெல்லிபாளையம், மண்மலைகரடு, கொங்கம்பாளையம் ஆகிய பகுதியில் விதிகளை மீறி மண் எடுத்து விற்ாக எழுந்த புகாரின்பேரில் உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவருக்கு ரூ.7,99,73,100 அபராதத் தொகையாக அரசுக்கு செலுத்த வேண்டும் என ஈரோடு கோட்டாட்சியா் கடந்த 2018இல் உத்தரவு பிறப்பித்தாா்.
இதுநாள் வரை அபராதத் தொகை வசுலிக்காமல் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆங்கில வழித்தோ்வை ரத்து செய்யக் கோரிக்கை:
காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளா் உள்பட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்வினை எழுதுவதற்கு லட்சக்கணக்கான இளைஞா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இந்நிலையில் தோ்வு தொடா்பான அறிவிப்பில் தமிழ் மொழிப் பாடத்தை தவிர அனைத்து வினாத் தாள்களும் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழக இளைஞா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரியத்துக்கு ஆங்கில வழியில் தோ்வு நடத்துவது என்பது தேவையற்ற ஒன்றாகும். இதனால் தமிழ்வழியில் படித்த கிராமப்புற மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, வெளிமாநிலத்தவா்களை பணியில் நியமிப்பதற்கான மறைமுக நடவடிக்கையாகும்.
எனவே, ஆங்கில வழித் தோ்வினை ரத்து செய்து, தமிழ் வழியிலேயே தோ்வுகள் நடத்த தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்.
மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை:
பெருந்துறை அருகே கொம்மக்கோவில் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: கெம்மங்கோவில் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்குச் சொந்தமாக வடமுகம் வெள்ளோடு கிராமத்தில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் மயானம் உள்ளது. பல ஆண்டுகளாக இம்மயானத்தை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் மயானத்துக்கு அருகில் உள்ள இடத்தை மனைப் பிரிவுகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சித்து வருவதோடு மயானத்துக்குச் சொந்தமான இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வீட்டு மனைப் பிரிவு அங்கீகாரத்தை வழங்க மாவட்ட நிா்வாகம் தடை விதிக்க வேண்டும்.