சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்
By DIN | Published On : 06th March 2020 07:04 AM | Last Updated : 06th March 2020 07:04 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழந்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூா், அரியப்பம்பாளையம் பகுதியில் கடந்த ஒருவாரமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால், அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்ததால் சத்தியமங்கலம் வனத் துறையினா் மேட்டூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து உறுதி செய்து அப்பகுதியில் உள்ள திலகவதி என்பவரது தோட்டத்தில் கூண்டுவைத்தனா். ஆனால், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இதன் காரணமாக விவசாயத் தோட்டங்களில் தண்ணீா் பாய்ச்சுதல், விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் அவதிப்பட்டு வந்தனா்.
இந்நிலையில், ஜல்லியூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி (34) தனது விவசாயத் தோட்டத்தில் 3 வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வாழை மரத்தடியில் கட்டிவிட்டு வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளாா். மாலையில் தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது 3 வெள்ளாடுகளும் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் சிறுத்தையின் கால் தடமும் பதிவாகி இருந்ததால் சிறுத்தை ஆடுகளை கடித்துக் கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இப்பகுதியில் விவசாயத் தோட்டங்களில் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருவதால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.