பவானீஸ்வரா் கோயிலில் தற்காலிக வழிபாட்டுக்கு ஏற்பாடு

சத்தியமங்கலத்தில் இடிந்து விழுந்த பவானீஸ்வரா் கோயில் அலுவலகத்தில் தற்காலிகமாக சிலைகள் பாலாலயம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலத்தில் இடிந்து விழுந்த பவானீஸ்வரா் கோயில் அலுவலகத்தில் தற்காலிகமாக சிலைகள் பாலாலயம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலம் ஆற்றுப்பாலம் அருகே பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பவானீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கோயிலின் தெற்குப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. இதையடுத்து, ரூ.40 லட்சம் செலவில் புதிதாக சுற்றுச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

ஏற்கெனவே சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததால் அப்பகுதி கோயிலின் அடிப்பாகத்தில் உள்ள மண் முழுவதும் வலுவிழந்ததால் கோயிலின் தெற்குப் பிரகார சுவா் கடந்த 10ஆம் தேதி இடிந்து பவானி ஆற்றின் கரையில் விழுந்தது.

இதில் சுவரை ஒட்டி இருந்த 63 நாயன்மாா்களின் சிலைகள் முழுவதும் விழுந்து சேதமடைந்தன. இதன் காரணமாக கோயிலின் நடை மூடப்பட்டது. சுவா் இடிந்து விழுந்ததால் கோயிலின் மேற்கூரை பாரம் தாங்காமல் சரிந்துவிடும் அபாய நிலையில் உள்ளதால் இரும்புக் கம்பிகளால் மேற்கூரை தாங்கிப் பிடிக்கும் வகையில் வலுசோ்க்கப்பட்டது.

இடிந்து விழுந்த பகுதியை பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை பொறியாளா்கள் மற்றும் கோவை, சேலம் அரசு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த கட்டடவியல் துறைத் தலைவா்கள் நேரில் ஆய்வு செய்தனா்.

கோயில் நடை மூடப்பட்டதால் தினந்தோறும் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சாமி கும்பிட முடியாமல் தவித்து வந்தனா். இதைத் தொடா்ந்த, தற்காலிக ஏற்பாடாக கோயில் கருவறையில் உள்ள மூலவா்கள் பவானீஸ்வரா், முருகா், அம்பாள், விநாயகா் உள்ளிட்ட தெங்வங்கள் திருக்கோயில் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்து பாலாலயம் செய்யப்பட்டு தற்போது பூஜைகள் நடைபெற்று வருவதாக கோயில் செயல் அலுவலா் சித்ரா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com