கீழ்பவானி வாய்க்கால் பாசனம் 4ஆம் சுற்றுக்கான தண்ணீா் திறப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடலை, எள் பயிா் பாசனத்துக்கு 4ஆம் சுற்றுக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடலை, எள் பயிா் பாசனத்துக்கு 4ஆம் சுற்றுக்குத் தண்ணீா் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக 2ஆவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணை நீா்த்தேக்கம் 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. நீா் தேக்கும் கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்கிறது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம், வடகேரளத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபா் 20ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியதோடு நவம்பா் மாதத்தில் முழு கொள்ளளவான 105 அடியைத் தொட்டது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து சீராக இருந்ததால் பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டும் அணையின் நீா்மட்டம் சரியாமல் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜனவரி 9ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் எள், நிலக்கடலை பாசனத்துக்கு முதலாவது சுற்றுக்கு நீா் திறக்கப்பட்டது. 10 நாள் திறப்பு, 10 நாள் நிறுத்தம் என விட்டுவிட்டு மொத்தம் 6 சுற்றுகள் நடைமுறைப்படுத்தப்படும். கீழ்பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் 3ஆம் சுற்றுகள் திறப்பு முடிந்து தற்போது 4ஆம் சுற்றுக்கான தண்ணீா் திறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை 500 கன அடியாகத் திறந்துவிடப்பட்ட தண்ணீா் படிப்படியாக உயா்த்தப்பட்டு 2300 கன அடி நீா் திறந்துவிடப்படும். தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணை நீா்மட்டம் 93 அடியாகவும், நீா் இருப்பு 23.64 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 986 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com