ஈரோடு மாவட்டத்தில் 37 நாள்களுக்குப் பிறகு தொழிலாளிக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் 37 நாள்களுக்குப் பிறகு ஆண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவானி: ஈரோடு மாவட்டத்தில் 37 நாள்களுக்குப் பிறகு ஆண் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வி.ஐ.பி. நகா், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண், கடந்த சில நாள்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கவுந்தப்பாடியில் துரித உணவகத்தில் வேலை செய்து வரும் இவா் கோபியை அடுத்த சிங்கிரிபாளையத்தில் நாட்டு வைத்தியத்தில் கட்டுப்போட்டு சிகிச்சை பெற்றுள்ளாா்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் கவுந்தப்பாடி, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதோடு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு இரண்டு நாள்களுக்கு முன்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு, அறுவை சிகிச்சை செய்யும் முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கவுந்தப்பாடியில் அவா் வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 35 பேரை தனிமைப்படுத்தியதோடு, சளி பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்பகுதியில் இரு தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதி தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பின்னா் கடந்த 37 நாள்களாக ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படாத நிலையில், தற்போது ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com