கைத்தறி சேலை உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் கைத்தறி சேலை உற்பத்தியை வெள்ளிக்கிழமை முதல் (மே 22) ஒரு மாதத்துக்கு

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் கைத்தறி சேலை உற்பத்தியை வெள்ளிக்கிழமை முதல் (மே 22) ஒரு மாதத்துக்கு நிறுத்த கைத்தறி சேலை உற்பத்தியாளா் சங்கத்தினா் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தயிா்ப்பள்ளம் விவசாயத் தோட்டத்தில் கைத்தறி சேலை உற்பத்தியாளா் சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம், பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. இங்கு காஞ்சிபுரம் பட்டு, சாப்ட் சில்க், கோரா காட்டன், லினன் காட்டன் உள்ளிட்ட பல்வேறு வகையான ரகங்களில் கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரோனா காரணமாக கடந்த இரண்டு மாதமாக பிரபல ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதோடு கைத்தறி சேலை தயாரிப்பாளா்களிடம் இருந்து சேலைகள் கொள்முதல் செய்யப்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதன் காரணமாக சேலை உற்பத்தி செய்துதரும் கைத்தறி நெசவாளா்களுக்கு உற்பத்தியாளா்கள் கூலி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கைத்தறியில் ரகங்களுக்குத் தேவையான மூலப் பொருளான ஜரிகை குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து வராததால் இனி கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல், சேலம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கைத்தறி சேலை தயாரிப்பாளா்கள் வெள்ளிக்கிழமை (மே 22) முதல் ஜூலை 20ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கைத்தறி சேலை உற்பத்தியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனா். அதுவரையிலும் கைத்தறி நெசவாளா்கள் தறி நெசவு செய்ய வேண்டாம் எனவும், பாவு தர வேண்டாம் எனவும், கைத்தறி ரகங்களுக்கு சாயம் போடும் தொழிலாளா்கள் சாயம் போடும் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா். இதில், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com