கவுந்தப்பாடியில் கரோனா பாதிப்பு எதிரொலி: 45 வீடுகளுக்கு சீல் வைத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் விரைவு உணவகத் தொழிலாளி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து
கவுந்தப்பாடியில் கரோனா பாதிப்பு எதிரொலி: 45 வீடுகளுக்கு சீல் வைத்து சுகாதாரத்துறையினர் பரிசோதனை

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் விரைவு உணவகத் தொழிலாளி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வசித்த தெருவில் உள்ள 45 வீடுகளைச் சீல் வைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கவுந்தப்பாடி, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த 52 வயதான விரைவு உணவகத் தொழிலாளிக்கு கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர், கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், கோபியை அடுத்த சிங்கிரிபாளையத்தில் நாட்டு வைத்தியத்தில் எண்ணெய் கட்டு போட்டுள்ளார்.

இதற்காக, வாடகைக் காரில் சென்று வந்துள்ளார். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு குணமடையாததால் கோபியில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தொடர்ந்து, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். எலும்புமுறிவால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் 20-ம் தேதி சேர்க்கப்பட்டார்.

அங்கு, மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்தபோது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததும், எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு நோயாளியுடன் இவரது மனைவி, இரு மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கவுந்தப்பாடியில் இவருடன் தொடர்பில் இருந்த 35-க்கும் மேற்பட்டோருக்கு 3 மருத்துவர்கள், 16 சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் சனிக்கிழமை கரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும், திருவள்ளுவர் வீதியில் உள்ள 45 வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டு, குடியிருப்போர் விவரம் சேகரிக்கப்பட்டதோடு, அனைவரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாடகைக் கார் ஓட்டுநர், தனியார் மருத்துவமனை பணியாளர்களும் சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். திருவள்ளுவர் தெரு முழுவதும் மூடப்பட்டு, சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

மேலும், தெருவில் வசித்து வரும் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com