வெளிமாநில ஆர்டர்கள் கிடைக்காததால் விசைத்தறிகள் இயங்குவதில் சிக்கல்: தொழிலாளர்கள் தவி்ப்பு

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது
வெளிமாநில ஆர்டர்கள் கிடைக்காததால் விசைத்தறிகள் இயங்குவதில் சிக்கல்: தொழிலாளர்கள் தவி்ப்பு

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் வெளி மாநில ஆர்டர்கள் இல்லாததால் 20 சதவீத தறிகளே இயங்கின்றன. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள், குடும்பத்தின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 5 லட்சம் விசைத்தறிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் நேரடியாகவும், மறைமுகவும் 15 லட்சம் பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி கூடங்களில் 50 சதவீதம் அளவுக்கு சிறு முதலீட்டில் வீட்டிலேயே 2 முதல் 5 விசைத்தறி இயந்திரங்களை நிறுவி சுயதொழிலாகச் செய்து வருகின்றனர்.

இன்னும் பலர் விசைத்தறிக் கூடங்களில் தினசரி கூலி அடிப்படையிலும் வேலை செய்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பிறகு ஜவுளிச் சந்தைகள் ஏற்கனவே பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கரோனா பொதுமுடக்கம் ஜாப் ஒர்க் அடிப்படையில் சேலை, துண்டு, வேட்டிகளை நெய்து கொடுக்கும் சிறு விசைத்தறியாளர்களை மிகக்கடுமையாக பாதித்துள்ளது.  இந்நிலையில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி தொழில் செய்து வரும் சிறு விசைத்தறியாளர்களை தவணை செலுத்த நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன. தவிர வேட்டி, சேலைக்கான கூலியும் ரூ.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர் ஈரோடு அருகே கதிரம்பட்டியை சேர்ந்த ஜி.ராஜேஷ் தெரிவித்தது: ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இப்போது கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்டாலும் கூட, வேறு புதிய பிரச்னைகளும் உருவாகி இருக்கிறது. ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்குப் பெரிய பெரிய நூற்பு ஆலைகளில் இருந்துதான் பாவு நூலும், கோனும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் ஊரடங்கின்போது நூற்பாலைகளில் வேலை செய்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இப்போது உடனடியாக நூல், கோன்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கு அறிவிப்புக்கு 10 நாள்களுக்கு முன்பே ஈரோடு ஜவுளிச் சந்தை மூடப்பட்டுவிட்டது. அதனால் ஏற்கனவே உற்பத்தி ஆன வேட்டி, சேலை, துண்டு ரகங்கள் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதற்கு முன்பு 60 நாள்கள் வரையிலான கடன் அடிப்படையில்கூட பாவு நூல், கோன் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர். இப்போது கையில் பணம் கொடுத்தால் மட்டுமே ஜாப் ஒர்க் தர முடியும் என்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடனாக குறைந்தபட்சம் ரூ.15,000 வழங்க வேண்டும். 

அப்போதுதான் பாவு நூல் வாங்கி தொழிலை ஆரம்பிக்க முடியும். அமைப்புசாரா நலவாரியம் மூலம் நெசவாளர்களுக்கு அரசு ரூ.2,000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்னும் 90 சதவீதம் பேருக்கு இத்தொகை வந்து சேரவில்லை. இத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய கடன்களை வழங்க சில முன்னெடுப்புகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. விசைத்தறி கூடங்களுக்கு, புதிய கடன்களை வழங்க வேண்டும். அதேநேரம், அவர்கள் ஏற்கனவே பெற்ற தொழில் கடனுக்கு வட்டித் தள்ளுபடி மற்றும் குறிப்பிட்ட அளவிலான சிறு கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வதன் மூலம் மட்டுமே சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களை முற்றாகக் காப்பாற்ற முடியும் என்றார்.
 
20 சதவீத தறிகள் மட்டுமே இயக்கம்:
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.கந்தவேல் கூறியதாவது: ஈரோடு வீரப்பன்சத்திரம், லக்காபுரம், சூளை, சித்தோடு, கங்காபுரம், பவானி உட்பட பல்வேறு பகுதியில் 40,000 விசைத்தறிக்கும் அதிகமாக உள்ளன. இதில் நேரடியாக, மறைமுகமாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் வரை பணியாற்றுகின்றனர்.

இங்குள்ள விசைத்தறிகளில் அதிகமாக ரயான் ரகம், தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, இலவச சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கரோனாவுக்கான பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் விசைத்தறிகள் மூடப்பட்டன. தற்போது இப்பணியில் பிற மாவட்ட, பிற மாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் அனைவரும் சொந்த ஊர் சென்றதால், விசைத்தறிகளை செவ்வாய்க்கிழமை முதல் இயக்க அனுமதித்தும் 20 சதவீத தறிகளே செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

விசைத்தறிகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. பொதுவாக விசைத்தறிகள் இடைவிடாமல் 24 மணி நேரமும் இயங்கக்கூடியவை. அப்போதுதான் பெற்ற ஆர்டரை பூர்த்தி செய்து வழங்க முடியும். தற்போது வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே உற்பத்தி செய்த துணிகள் ரூ.500 கோடிக்கு மேல் இருப்பில் உள்ளன. அவற்றை ஆர்டர் வழங்கியவருக்கு அனுப்ப முடியவில்லை. புதிதாக ஆர்டர் தருபவர்கள் மகாராஷ்டிரம், உத்திரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ளனர். அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பி, கடைகள், ஜவுளி சார்ந்த தொழில்கள் துவங்கவில்லை. 

இதனால் அவர்களுக்கு துணி அனுப்ப முடியவில்லை. ஏற்கனவே அனுப்பிய துணிகள், ஆர்டர்களுக்கான பணமே பெறாத நிலையில், புதிதாக துணிகளை அனுப்பினால் நெசவாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடும். இதனால் தேசிய அளவில் ஜவுளித்துறை தடையில்லாமல் இயங்க துவங்கிய பிறகு, தமிழகத்தில் 24 மணி நேரமும் விசைத்தறிகள் செயல்பாட்டுக்கு வரும். வட மாநில மற்றும் பிற மாவட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வந்தால் மட்டுமே விசைத்தறிகளை முழுமையாக இயக்க முடியும். விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்ரகள் பழைய நிலைக்கு திரும்ப 6 மாத காலம் வரை ஆகும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com