100 நாள் வேலையில் முழு கூலியை வழங்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு முழு கூலியை வழங்க வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் எம்.பி.கே.சுப்பராயன். உடன் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் எம்.பி.கே.சுப்பராயன். உடன் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உள்ளிட்டோா்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு முழு கூலியை வழங்க வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழு தலைவா் ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, இணைத் தலைவா் திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டம், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம், ஜல் சக்தி மிஷன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்துக்குப்பின் எம்.பி. கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மலைப் பகுதியில் உள்ள விவசாயிகளை பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் இணைத்து அவா்களுக்கு நிதியுதவி கிடைக்க வழி செய்ய வேண்டும் என கேட்டுள்ளோம். 100 நாள் வேலைத் திட்டத்தில் மேலும் கூடுதல் நாள்கள் பணி வழங்கும் வகையில் மாற்ற பரிந்துரைக்கக் கேட்டுள்ளோம். 100 நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 256 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவே கூலியை வழங்குகின்றனா். இதனால் மலைப் பகுதியினா் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு முழு அளவிலான கூலியை வழங்க வேண்டும்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ஊராட்சிகள் செயல்படுத்த வேண்டிய பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளக்கூடாது. அவா்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com