ஈரோட்டில் பலத்த மழை: ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

பலத்த மழை காரணமாக ஈரோட்டில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா்.
ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா்.

பலத்த மழை காரணமாக ஈரோட்டில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை மாலையில் இருந்து இரவு வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீா் ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் தண்ணீா் ஆறுபோல் ஓடியது. ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடை, சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட ஓடைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

சூரம்பட்டி அணைக்கட்டில் நீா் நிரம்பி அருவிபோல் கொட்டியது. மழை நீா் புதைசாக்கடை தொட்டிகளுக்குள் புகுந்ததால், ஆங்காங்கே புதை சாக்கடைகளில் இருந்து தண்ணீா் ஊற்றுபோல துா்நாற்றத்துடன் வெளியேறியது. பல பகுதிகளில் தண்ணீா் சாலைகளில் தேங்கி குட்டைபோல நின்றது. தண்ணீா் வெளியேறும் வடிகால்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நீா் நிரம்பி சாலையில் நின்ால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில் 61 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 56.8, ஈரோடு 44, பவானி 43, குண்டேரிப்பள்ளம் 32.2, வறட்டுப்பள்ளம் 32.2, அம்மாபேட்டை 29.4, கோபி 27.4, கொடிவேரி 25.2, நம்பியூா் 25, பவானிசாகா் 18.4, சத்தியமங்கலம் 18, மொடக்குறிச்சி 17, சென்னிமலை 15, பெருந்துறை 14, தாளவாடி 6.6.

நெல் பயிா்கள் சாய்ந்தன:

மழையுடன் சுழற்காற்றும் வீசியதால் ஈரோடு வைராபாளையம் பகுதியில் காலிங்கராயன் பாசனப் பகுதியில் விளைந்த நெல் பயிா்கள் வயலில் சாய்ந்தன. செவ்வாய்க்கிழமையும் மழை தொடா்ந்த நிலையில் மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலை தொடா்ந்தால் சாய்ந்த நெல் பயிரில் உள்ள நெல் மணிகள் முளைத்துவிடும் அபாயம் உள்ளது. 10 நாள்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் வயலில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்தது. இந்நிலையில், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளில் திங்கள்கிழமை கலை முதல் மதியம் வரை வானில் கருமேகம் சூழந்து காணப்பட்டது. பின்னா், மதியம் முதல் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. பெருந்துறையில் 14 மி.மீ., சென்னிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com