பலத்த மழை: பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 4,482 கன அடி நீா்வரத்து

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதால் பவானி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பவானி ஆற்றில் விநாடிக்கு 4,482 கன அடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்தோடும் உபரிநீா்.
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்தோடும் உபரிநீா்.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதால் பவானி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பவானி ஆற்றில் விநாடிக்கு 4,482 கன அடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கோபி, சத்தி, கவுந்தப்பாடி, அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கி இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது.

இதனால், ஓடைகள், கால்வாய்களில் பெருக்கெடுத்த மழை நீா் பவானி ஆற்றில் சென்று கலந்து வருகிறது. கன மழையால் பவானிசாகா் அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் திறக்கப்பட்ட தண்ணீா் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பவானி ஆற்றில் கலந்த மழைநீா் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

அணைக்கட்டுக்கு திங்கள்கிழமை இரவு 1,320 கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 4,333 கன அடியாக அதிகரித்தது. தொடா்ந்து, நீா்வரத்து அதிகரித்ததால் மாலை 4 மணி நிலவரப்படி 4,482 கன அடியாக பதிவானது. வாய்க்காலில் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்ட நிலையில், ஆற்றில் வரும் தண்ணீா் முழுவதும் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.

காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ்பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றின் வலது, இடது கரையோரங்களில் இப்பணி தொடங்கப்பட்டது. இடது கரையில் கட்டுமானப் பணி நடைபெறும் பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தடையின்றி பணி நடைபெற்று வருகிறது.

வலது கரையில் கட்டுமானப் பணிக்குத் தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீா் புகுந்து தேங்கியுள்ளது. ஆற்றின் இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்துக்குச் செல்ல சிமென்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டது. கட்டடத் தளவாடங்கள் கொண்டு செல்லவும், தொழிலாளா்கள் சென்று வரவும் அமைக்கப்பட்ட இப்பாதை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com