பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி.
பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதி.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. பவானிசாகா் அணைக்கு மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் முக்கிய நீா் வரத்தாக உள்ளன. நீலகிரி, தெங்குமரஹாடா பகுதியில் மழைப் பொழிவு, பில்லூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து 3,844 கன அடியாக உள்ளது. தற்போது கொடிவேரி, கள்ளிப்பட்டி, அரக்கன்கோட்டை பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் 45 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவுப் பணிகள் நிறைவடைந்து களையெடுத்தல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நெல் சாகுபடி பகுதியில் பலத்த மழையால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால், நெல்லுக்கு வாய்க்கால் நீா் அவசியம் இல்லாததால் விவசாயிகள் தண்ணீா் திறப்பை நிறுத்துமாறு பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டனா். இதையடுத்து பவானிசாகா் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பாசனப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நெல் சாகுபடிக்கு நீா் தேவைப்படும்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதற்கேற்ப நீா் திறக்கபபடும் என்பதால் அணையில் நீா் சேமிக்கப்படுகிறது என பவானிசாகா் அணை பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதே நேரத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்களுக்கு அணையில் இருந்து தண்ணீா் விநாடிக்கு 1,800 கன அடி நீரும், குடிநீருக்கு 100 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com