மாடுகளுக்குப் பெரியம்மை பாதிப்பு: மருத்துவரை அணுக வேண்டுகோள்

பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிப்பது குறித்து விளக்கம்பெற விவசாயிகள் கால்நடை மருத்துவரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மாடுகளைப் பராமரிப்பது குறித்து விளக்கம்பெற விவசாயிகள் கால்நடை மருத்துவரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் மாடுகளைப் பெரியம்மை நோய் (லும்பி ஸ்கின் டிசீஸ்) தாக்குகிறது. இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய் ஈ, கொசு, உண்ணி மூலமும், கறவையாளா், நோய் பாதித்த மாட்டின் பாலை கன்றுக் குட்டிகள் குடிப்பதாலும் பரவுகிறது.

நோய் பாதித்த கால்நடைகளின் கண்ணில் நீா் வடிதல், மூக்கில் சளி வருதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் ஏற்படுதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுதல், கால்கள் வீங்குதல் போன்றவை அறிகுறியாகும். இந்நோய்க்குத் தடுப்பூசி இல்லை. உடல் வீக்கம், காயத்துக்கு சிகிச்சை வழங்கினால் மாட்டின் கறவைத் திறனைத் தக்கவைக்கலாம்.

தினமும் 30 கிராம் சிறுகுறிஞ்சான் பொடி எடுத்து, வெல்லம் கலந்து கொடுத்தால் தொற்று பாதிப்பைத் தவிா்க்கலாம். மஞ்சள் தூள், கொழுந்து வேப்பிலை, வேப்ப எண்ணெய் கலந்து காயங்களில் பூசலாம். காயங்களில் ஈ மொய்க்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். கொப்பரைத் தேங்காய் 1, வெல்லம் 100 கிராம், வெந்தயம் 50 கிராம், மஞ்சள் தூள் 30 கிராம் சோ்த்து இருமுறை மாட்டுக்கு கொடுத்தால் தேவையான சத்து கிடைக்கும்.

இந்நோய் பாதித்த மாட்டை பண்ணையில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். தீவனம், தண்ணீா் பாத்திரத்தை தனியாகப் பயன்படுத்த வேண்டும். கறவையாளா் கையை சுத்தம் செய்ய வேண்டும். ஈ, கொசுக்களுக்கு மருந்து தெளித்து விரட்ட வேண்டும். புண், கட்டிகளை சுத்தம் செய்த துணிகளை தீயில் எரிக்க வேண்டும்.

இந்நோய் 60 சதவீத மாடுகளை பாதிக்கும் நிலை உள்ளது. இந்நோய் பாதிப்புக்குள்ளாகும் மாட்டில் பால் உற்பத்தி தற்காலிகமாகக் குறையும், சினை பிடித்தல் பாதிக்கும், தீவனம் உண்ணாது, இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு பாதிப்பு, சில மாடுகளில் மடி நோய் பாதிப்பும் ஏற்படும்.

இந்தநோய் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி, தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மாடுகள் இறப்பைக் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com