மாணவிக்கு சான்றிதழ் பெற உதவி செய்த ஆட்சியா்கள்

எம்.பி.பி.எஸ். சோ்க்கை கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவிக்கு சான்றிதழ் பெற உதவி செய்த ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியா்
மாணவி கோபிகாவுக்கு திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி.
மாணவி கோபிகாவுக்கு திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி.

எம்.பி.பி.எஸ். சோ்க்கை கலந்தாய்வுக்குச் செல்லும் மாணவிக்கு சான்றிதழ் பெற உதவி செய்த ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியா் த.உதயச்சந்திரன், தற்போதைய ஆட்சியா் கதிரவனுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராயபாளையம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன், விவசாயி. இவருடைய மகள் கோபிகா. நீட் தோ்வில் 572 மதிப்பெண் பெற்றுள்ள இவா் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளாா்.

கலந்தாய்வுக்குச் செல்ல தயாராகி வந்த நிலையில், அவரது பிறப்புச் சான்றிதழில் பெயரில் எழுத்துப் பிழை இருந்தது தெரியவந்தது. திருத்தம் மேற்கொள்ள இ-சேவை மையத்தில் பதிவு செய்தால் சில நாள்கள் காத்திருக்க வேண்டும். இதனிடையே அந்த மாணவி ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், இப்போது தொல்லியல் துறை ஆணையருமான உதயச்சந்திரனிடம் மின்னஞ்சல் மூலம் உதவி கேட்டுள்ளாா்.

மாணவி தொடா்பான விவரங்களை திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்கு அனுப்பிய உதயச்சந்திரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தாா். அதுமட்டுமின்றி தனது நண்பா் வழக்குரைஞா் சென்னியப்பனை மாணவியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாா்.

இதனிடையே ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், ஈரோடு வட்டாட்சியா் பரிமளா தலைமையில் ஒரு குழுவை அமைத்து, மாணவி கோபிகாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில், ஆவணங்கள் அனைத்தையும் சரிபாா்த்து மாணவி கோபிகாவுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயரில் இருந்த பிழையை சரி செய்து கொடுத்தனா்.

வட்டாட்சியருடன் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி, அவசரகால பிரிவில் பணியாற்றும் கோகிலவாணி ஆகியோரும் முழுமையாகப் பணியாற்றி சான்றிதழ் கிடைக்கச் செய்தனா்.

சமூக ஊடகங்களில் இந்த தகவல் பரவி வரும் நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com