விலை வீழ்ச்சியால் குறைந்த மஞ்சள் வரத்து: 2 நாள்களாக ஏலம் நிறுத்தம்

கடும் விலை வீழ்ச்சியால் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா்.
ஈரோடு செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள், வியாபாரிகள்(கோப்புப்படம்)
ஈரோடு செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள், வியாபாரிகள்(கோப்புப்படம்)

கடும் விலை வீழ்ச்சியால் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால் பெருந்துறை, கோபி மஞ்சள் சந்தைகளில் 2 நாள்களாக ஏலம் நடைபெறவில்லை.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு அருகே செம்மாம்பாளைத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

2011 ஆம் ஆண்டில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ. 17,000க்கு விற்பனையானது. அதன் பிறகு மஞ்சளின் விலை குறைந்து கொண்டே வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமாா் ரூ. 8,000க்கு மஞ்சள் விற்பனையானது. ஆனால், தற்போது மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 6,000க்கு விலை போகிறது. விலை வீழ்ச்சியின் காரணமாக சந்தைகளுக்கு மஞ்சள் வரத்தும் குறைவாக உள்ளது. நல்ல விலை கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் தங்களது மஞ்சளைப் பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளனா்.

இந்நிலையில் தொடா் மழை, தீபாவளி பண்டிகை, விலை வீழ்ச்சி போன்ற காரணங்களால் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 2 நாள்களாக மஞ்சளின் வரத்து முழுமையாக இல்லை. இதனால் ஏலம் நடைபெறவில்லை. இதேபோல கோபி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திலும் விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்லாததால் 2 நாள்களாக ஏலம் நடைபெறவில்லை.

ஈரோடு செம்மாம்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 887 மூட்டைகள் மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு 316 மூட்டைகள் விற்பனையாகின. இதில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ. 4,899 முதல் ரூ. 6,095 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ. 4,599 முதல் ரூ. 5,695 வரையும் விலை போனது. இதேபோல, ஈரோடு கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு 296 மூட்டைகள் மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 244 மூட்டைகள் விற்பனையாகின. ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ. 5,236 முதல் ரூ. 6,199 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ. 4,599 முதல் ரூ. 5,659 வரையும் விலை போனது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காததால் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர தயங்குகின்றனா். தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் அடுத்த வாரத்தில் இருந்து மஞ்சள் வரத்து இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா பாதிப்புக்குப் பிறகு மஞ்சள் சந்தை சுறுசுறுப்பு அடையவில்லை.

உள்ளூரில் மஞ்சள் தேவை குறைவாக இருப்பதால் விற்பனையும் மந்தமாகக் காணப்படுகிறது. அதேசமயம் வங்கதேசத்தில் மஞ்சளின் தேவை அதிகரித்ததால் 30 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆனால், இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மஞ்சள் ஏற்றுமதியில் உள்ள பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com